கோப்பை வென்றது இந்தியா! : 5வது போட்டியில் நியூசி., ஆறுதல் வெற்றி!. ![]() ஆக்லாந்து, மார்ச்.15- ஐந்தாவது ஒரு நாள் போட்டியில் ஜெசி ரைடர் "ஆல்-ரவுண்டராக' ஜொலிக்க நியூசிலாந்து அணி, இந்தியாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆறுதல் தேடியது. இம்முறை இந்திய அணியின் ஆட்டம் சொதப்பலாக அமைந்தது. ஆனாலும் தோனியின் படை தொடரை 3-1 என்ற கணக்கில் வென்று, கோப்பையை சூப்பராக கைப்பற்றியது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து ஒரு நாள் போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடியது. இரண்டாவது போட்டி மழையால் ரத்தானது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் கடந்த 33 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு நாள் தொடரை வென்று வரலாறு படைத்தது. நேற்று முக்கியத்துவம் இல்லாத ஐந்தாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஆக்லாந்தில் நடந்தது. மழை காரணமாக போட்டி 43 ஓவர்களாக குறைக்கப் பட்டது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார். மில்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து, அதிரடியை துவக்கினார் சேவக். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய காம்பிர் (5) சோபிக்க வில்லை. அடுத்து வந்த ரெய்னாவும் 8 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். சேவக் அதிரடி கைகொடுக்க, 10 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 66 ரன்கள் எடுத்திருந்தது. 3 பவுண்டரி 3 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்த சேவக், ஓரம் பந்து வீச்சில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். துவக்க விக்கெட்டுகள் விரைவில் சரிந்ததால், "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இந்நிலையில் மித வேகப்பந்து வீச்சாளர் ரைடர், பந்து வீச்சில் மிரட்டினார். இவரது துல்லியமான பவுலிங்கில், யுவராஜ் சிங் (11), கேப்டன் தோனி (9), யூசுப் பதான் (0) ஆகியோர் சொற்ப ரன்களுக்கு அவுட்டாயினர். இந்திய அணி 111 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. ஒரு புறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், ரோகித் சர்மா பொறுப்புடன் ஆடி ரன் சேர்த்தார். இவருக்கு ஹர்பஜன் சிங்(1) உள்ளிட்ட "டெயிலெண்டர்கள்' ஒத்துழைப்பு அளிக்க தவற, இந்திய அணி 36.3 ஓவரில் 149 ரன்களுக்கு சுருண்டது. ரோகித் சர்மா (43) அவுட்டாகாமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் ரைடர் அதிகபட்சமாக 3 விக்கெட் கைப்பற்றினர். போகிற போக்கில் எட்டக் கூடிய இலக்கை விரட்டிய நியூசிலாந்து அணி, மெக்கலம் (2) விக்கெட்டை விரைவில் இழந்தது. இதற்கு பின் ரைடர், கப்டில் இணைந்து அதிரடியாக ரன் சேர்த்தனர். குறிப்பாக இஷாந்த் சர்மா பந்துவீச்சை வெளுத்து வாங்கினர். அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரைடர், ஒரு நாள் அரங்கில் 2 வது அரை சதம் கடந்தார். 6 பவுண்டரி 4 சிக்சருடன் 63 ரன்கள் குவித்த ரைடர், இஷாந்த் சர்மா "வேகத்தில்' போல்டானார். தொடர்ந்து அபாரமாக ஆடிய கப்டில் ஒரு நாள் அரங்கில் 3 வது அரை சதம் கடந்தார். நியூசிலாந்து அணி 23.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கப்டில் (57), ரோஸ் டெய்லர் (28) அவுட்டாகாமல் இருந்தனர். ஜெசி ரைடர் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். இப்போட்டியில் தோல்வி அடைந்த போதும், இந்திய அணி தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வரும் 18 ம் தேதி ஹாமில்டனில் துவங்குகிறது. ஆக்லாந்து போட்டியின் தோல்விக்கு ரசிகர் களிடம் வருத்தம் தெரிவித்தார் இந்திய கேப்டன் தோனி. பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது பெரும் ஆரவாரத் துக்கு மத்தியில் அவர் கூறுகையில்,"" இத்தொடரில் சிறப்பாக செயல்பட்ட சக இந்திய வீரர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இருப்பினும் 5வது போட்டியில் ஏமாற்றம் அளித்ததற்கு ரசிகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய பேட்ஸ்மேன்கள் தவறான "ஷாட்'களை தேர்ந்தெடுத்து ஆடினர். அடுத்தடுத்து விரைவாக விக்கெட்டுகள் விழுந்ததால், அதிக ரன் குவிக்க முடியாமல் போய்விட்டது. அடுத்து நடக்க உள்ள டெஸ்ட் தொடரில் இந்திய அணி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும்,'' என்றார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் கடும் போட்டியாக அமையும் என்றார் நியூசிலாந்தின் கேப்டன் டேனியல் வெட்டோரி. இது குறித்து அவர் கூறுகையில்,"" இன்றைய போட்டிக்கு வருகை தந்த ஏராளமான ரசிகர்களுக்கு எனது நன்றி. கடைசி போட்டியில் வெற்றி பெற்றது, டெஸ்ட் தொடருக்கு முன் நம்பிக்கை அளித்துள்ளது. டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் கடும் போட்டியாக அமையும். நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என எதிர்பார்க்கிறேன்,'' என்றார். நேற்றைய போட்டியில், நியூசிலாந்தின் ரைடர் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். குறிப்பாக இஷாந்த் சர்மாவின் பந்து வீச்சை விளாசித் தள்ளினார். 11 வது ஓவரின் கடைசி பந்தை ரைடர், சிக்சருக்கு விரட்டினார். பந்து வீசிய இஷாந்த், ரைடரிடம் சென்று ஏதோ பேசினார். அதற்கு ரைடர் ஏளனம் செய்வது போல் "சைகை' செய்தார். உடனடியாக தலையிட்ட பிரவீண் குமார் இருவரையும் சமரசம் செய்து வைத்தார். தென் ஆப்ரிக்க அம்பயர் ரூடி குயர்ட்சன், இஷாந்த் சர்மாவை எச்சரித்து அனுப்பினார். தொடர்ந்து விளாசல் ஆட்டம் ஆடிய ரைடர், இஷாந்த் பந்து வீச்சிலேயே கிளீன்போல்டானார். மோதல் குறித்து ரைடர் கூறுகையில், "" ஆடுகளமும், பந்து வீச்சும் அடித்து ஆடுவதற்கு வசதியாக இருந்தது. அதனால் எல்லா பந்துகளையும் அடித்து ஆட முற்பட்டேன். ஆனால் இஷாந்த் சர்மா ஏதோ கூற, உணர்ச்சி வசப்பட்டு விட்டேன். கடைசியில் ஒருவருக் கொருவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டோம்,'' என்றார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |