"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

அப்பாவி தமிழர்கள் படுகொலை: இலங்கை அரசுக்கு ஐ.நா. கண்டனம்




ஜெனீவா, மார்ச்.14-

அப்பாவி தமிழர்கள் பலியாவது தொடர்பாக, இலங்கை அரசுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் ஜெனீவா நகரில் இருந்து ஐ.நா. மனித உரிமை தூதர் நவி பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில், பாதுகாப்பு வளைய பகுதிகளுக்குள் இலங்கை ராணுவம் தொடர்ந்து குண்டு வீசி வருகிறது. பொதுமக்கள் தங்கி உள்ள இதர இடங்கள் மீதும் குண்டு வீசி வருகிறது. அப்பாவி தமிழர்களை விடுதலைப்புலிகள் மனித கேடயங்களாக பிடித்து வைத்திருப்பதாகவும், தப்பிச்செல்ல முயல்பவர்களை சுட்டுக்கொல்வதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர்கள் சிறுவர்களை வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பதாக தெரிகிறது.

இத்தகைய செயல்கள், சர்வதேச மனித உரிமை மற்றும் மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானவை. இவை போர் குற்றங்களாகவும் கருதப்படும்.

இந்த சண்டையில் கடந்த ஜனவரி 20-ந் தேதியில் இருந்து இதுவரை 2,800 அப்பாவி மக்கள் பலியாகி உள்ளனர். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்பு வளைய பகுதிக்குள் இருந்தவர்கள் ஆவர். நூற்றுக்கணக்கான குழந்தைகளும் பலியாகி உள்ளனர். இவ்வளவு குழந்தைகள் பலியாகி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதே ரீதியில் போர் நீடித்தால், சாவு எண்ணிக்கை பேரழிவு நிலைக்கு சென்று விடும் என்று அஞ்சுகிறோம். உணவு மற்றும் அத்தியாவசிய மருந்து பொருட்கள் தட்டுப்பாடும், மனிதாபிமான சூழ்நிலையை மேலும் சீர்குலைத்து விடும். எனவே, அப்பாவி மக்கள் பாதுகாப்பாக வெளியேற வசதியாக, இலங்கை ராணுவமும், விடுதலைப்புலிகளும் தாக்குதலை நிறுத்த வேண்டும். ஐ.நா.வும், இதர சுயேச்சையான அமைப்புகளும் நிலைமையை துல்லியமாக கண்டறிய இலங்கை அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.

அப்பாவி மக்களை மனிதத்தன்மை இன்றி, கொடூரமாக நடத்தும் விடுதலைப்புலிகளின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது போர் குற்றமா? என்று ஆய்வு செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இலங்கை ராணுவம் பிடித்து வைத்துள்ள இடங்களில் தற்போது விடுதலைப்புலிகள் மீண்டும் ஊடுருவி வருகின்றனர். இதனால் இலங்கைப் படையினர் குழப்பம் அடைந்துள்ளனர். விசுவமடு, யாழ்ப்பாணம், கிலாலி உள்ளிட்ட இடங்களில் ராணுவத்தினருக்கும், புலிகளுக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. குறிப்பாக, விசுவமடு பகுதியில் ராணுவ பீரங்கித் தளத்தை தாக்கி தகர்த்த விடுதலைப்புலிகள், அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்களை கொன்று விட்டனர்.

புதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கடந்த சில நாட்களாக விடுதலைப்புலிகள் நடத்திய கடுமையான தாக்குதலில் 700 படையினர் கொல்லப்பட்டும், 500-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக கொழும்பில் பெயர் குறிப்பிட விரும்பாத ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராணுவ தரப்பில் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டு வருவது குறித்து அதிபர் ராஜபக்சே கவலை அடைந்துள்ளார். இந்த உயிர்ச்சேதம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு ராஜபக்சே உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும், விசுவமடுவில் படையினருக்கு ஏற்பட்ட கடுமையான இழப்புகள் தொடர்பாக போர்க்களத்தில் உள்ள படை உயரதிகாரிகளுடன் ராஜபக்சே நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வன்னிப் பகுதியில் இலங்கை ராணுவம் நேற்று நடத்திய தாக்குதல்களில் 57 தமிழர்கள் பலியானார்கள்.

அதே சமயத்தில், புதுக்குடியிருப்பு பகுதியில் நடந்த சண்டையில் 41 விடுதலைப்புலிகளை கொன்று விட்டதாகவும், ஏராளமானமான ஆதங்களை கைப்பற்றி இருப்பதாகவும் இலங்கை ராணுவம் கூறியுள்ளது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections