"பிரதமர் வேட்பாளராக என்னை அறிவிக்க வேண்டும்" 3-வது அணியில் இணைய மாயாவதி 2 நாள் "கெடு". ![]() புதுடெல்லி, மார்ச்.14- 3-வது அணியில் இணைவதற்கு, மாயாவதி 2 நாள் கெடு விதித்து இருக்கிறார். தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்து வருகிறார். பாராளுமன்ற தேர்தலில், காங்கிரஸ், பா.ஜனதா அணிகளுக்கு மாற்றாக, 3-வது அணி மீண்டும் உருவாகி உள்ளது. 9 கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற 3-வது அணியின் தொடக்க விழா மாநாடு, கர்நாடக மாநிலத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த அணி உருவான அடுத்த நாளிலேயே, பிரதமர் வேட்பாளர் யார்? என்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்த அணி உருவாக முயற்சி மேற்கொண்ட இடதுசாரி கட்சி தலைவர்கள், தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் பிரதமர் பதவி வேட்பாளர் பற்றி நிலைமைக்கு ஏற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்திருந்தனர். முன்னதாகவே பிரதமர் வேட்பாளர் பற்றி அறிவித்தால் கூட்டணியில் குழப்பம் ஏற்படலாம் என்பதால், அவர்கள் இந்த நிலையை எடுத்து இருந்தனர். ஆனால், தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்தால்தான், 3-வது அணியில் இணைவது என்பதில் மாயாவதி பிடிவாதமாக இருந்து வருகிறார். பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை இன்னும் 2 நாட்களில் (15-ந்தேதிக்குள்) முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்றும் அவர் `கெடு' விதித்து இருக்கிறார். மாநாட்டில் பங்கேற்ற மற்ற தலைவர்களிடம், பகுஜன்சமாஜ் கட்சியின் பொதுச் செயலாளர் சதீஷ்சந்திர மிஷ்ராவும், பிரதமர் வேட்பாளர் மாயாவதிதான் என்று, திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடக்க விழாவில் மிஷ்ரா பங்கேற்றாலும், 3-வது அணியில் இடம்பெறுவது பற்றி பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் திட்டவட்டமாக அறிவிக்கவில்லை. மாயாவதி கட்சியின் இந்த பிடிவாதம் இடதுசாரிகள் உள்ளிட்ட மற்ற கட்சி தலைவர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. தொடக்கவிழா நடந்ததுமே சிக்கல் எழுந்துள்ள இந்த பின்னணியில் 3-வது அணி தலைவர்களுக்கு மாயாவதி, டெல்லியில் நாளை அளிக்கும் விருந்து கூட்ட விவாதம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், பீகாரை சேர்ந்த ராம்விலாஸ்பஸ்வான் உள்ளிட்ட பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கூட்டணி தலைவர்கள் சிலரும் 3-வது அணிக்கு வரலாம் என்று, இடதுசாரி கட்சியினர் எதிர்பார்க்கிறார்கள். அந்த தலைவர்களும் பிரதமர் பதவியை எதிர்பார்க்கக்கூடும் என்று கருதுவதால், தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரை பகிரங்கமாக அறிவிக்க அவர்கள் தயங்கி வருகிறார்கள். அதே நேரத்தில், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் `முதல் எதிரி'யாக இருக்கும் முலாயம்சிங்கின் சமாஜ்வாடி கட்சியையும் இந்த அணிக்கு கொண்டு வருவதில் ஆர்வத்துடன் உள்ளனர். அத்துடன் ஏறத்தாழ 10 தலைவர்கள் பிரதமர் பதவி மீது கண் வைத்திருப்பதால், பிரதமர் வேட்பாளர் பற்றி முன்கூட்டியே அறிவித்துவிட வேண்டும் என்பதில் மாயாவதி கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். "தேர்தலில் மாயாவதி கட்சி 50 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுக்கும் என்பது உறுதி. இந்த நிலையில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க தயக்கம் காட்டுவது ஏன்?'' என்றும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏற்கனவே, அணுசக்தி ஒப்பந்த பிரச்சினையில், கடந்த ஜுலை மாதம் 22-ந்தேதி பாராளுமன்றத்தில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறுவதற்கு முன்பாகவே, மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் யோசனையை முன்வைத்தனர். ஆனால், 3-வது அணியின் மற்ற கட்சி தலைவர்கள் அப்போது எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த யோசனை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 3-வது அணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வு சர்ச்சை எழுந்துள்ள நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர்களான தேவேகவுடா, அவருடைய மகனும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி ஆகியோர் ஆதரவு தெரிவித்து உள்ளனர். நாளை டெல்லியில் நடைபெறும் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில், 3-வது அணியின் பிரதமர் வேட்பாளராக மாயாவதி அறிவிக்கப்படலாம் என்று, பெங்களூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த குமாரசாமி நம்பிக்கை தெரிவித்தார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |