பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி படுகொலை ![]() சென்னை, மார்ச்.14- சென்னையில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கிணற்றில் வீசி படுகொலை செய்யப்பட்டது. இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட தந்தை கைது செய்யப்பட்டார். சென்னை சூளைமேடு சண்முகநாதர் ரோட்டில் வசிப்பவர் சண்முகசுந்தரம். இவர், தனியார் கம்பெனியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ராஜகுமாரி அரசு பொதுமருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து ஓய்வு பெற்றுள்ளார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மூத்த மகனும், மகளும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். இளைய மகன் நிரஞ்சன்குமார் (வயது 29) எம்.இ. என்ஜினீயரிங் பட்டதாரி. பெங்களூரில் உள்ள `சிஸ்கோ' என்ற நிறுவனத்தில் மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றுகிறார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி அன்று என்ஜினீயர் நிரஞ்சன்குமாருக்கு திருமணம் நடந்தது. அவரது மனைவியின் பெயர் சங்கீதா (22). சங்கீதாவும் பி.இ. என்ஜினீயரிங் பட்டதாரி ஆவார். திருமணத்துக்கு பின்னர் சங்கீதா, தனது கணவர் நிரஞ்சன்குமாருடன் பெங்களூரில் வசித்து வந்தார். திருமணமான 2 மாதத்திலேயே சங்கீதா கர்ப்பம் அடைந்தார். ஆனால், குழந்தை வேண்டாம் என்று நிரஞ்சன்குமார் கூறியதாக தெரிகிறது. கருவை அழித்துவிட வேண்டும் என்று நிரஞ்சன்குமார் வற்புறுத்தினார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. சங்கீதாவின் பெற்றோர் சென்னை வில்லிவாக்கத்தில் வசிக்கிறார்கள். தகராறு ஏற்பட்டதால் சங்கீதாவை அவரது பெற்றோர் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டனர். கர்ப்பம் அடைந்த நிலையில் சங்கீதா அவரது பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று மாலை சங்கீதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சங்கீதா சேர்க்கப்பட்டார். அங்கே அவர் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். சுக பிரசவத்தில் குழந்தையை பெற்றெடுத்த அவர் புதன்கிழமை ஆஸ்பத்திரியில் இருந்து பெற்றோர் வீட்டுக்கு வந்தார். உடனடியாக சங்கீதாவை மாமனாரும், மாமியாரும் சூளைமேட்டில் உள்ள தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டனர். குழந்தையை பார்ப்பதற்காக நிரஞ்சன்குமாரும் பெங்களூரில் இருந்து வந்திருந்தார். நேற்று முன்தினம் நிரஞ்சன்குமார், மனைவி, குழந்தையோடு சந்தோசமாகத்தான் இருந்தார். இரவில் கணவனும், மனைவியும், குழந்தையோடு சந்தோசமாக படுத்திருந்தனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பாத்ரூம் செல்ல சங்கீதா எழுந்தபோது அருகில் படுத்திருந்த குழந்தையை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பக்கத்து அறையில் படுத்திருந்த மாமனார், மாமியாரிடம் கேட்டபோது அவர்களும் குழந்தையை பார்க்கவில்லை என்று கூறிவிட்டனர். கணவர் நிரஞ்சன்குமாரிடம் கேட்டபோது, `குழந்தையை நான் தான் கிணற்றில் வீசி கொன்றேன்' என்று எந்தவித பதற்றமும் இல்லாமல் சொன்னார். உடனே பதறி துடித்த சங்கீதா கதறி அழுதார். வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றுக்குள் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்தது. தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் கிடந்த குழந்தையின் பிணத்தை மீட்டனர். இதற்குள் தகவல் தெரிந்து சங்கீதாவின் தந்தை பாலசுப்பிரமணியம், தாயார் மரகதம் மற்றும் 2 சகோதரர்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடிவந்தனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. துணை கமிஷனர் கணேசமூர்த்தி உடனடியாக விரைந்து வந்து விசாரணை நடத்தினார். சூளைமேடு இன்ஸ்பெக்டர் செல்வகுமார் குழந்தையின் பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை படுகொலை செய்ததாக என்ஜினீயர் நிரஞ்சன்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது சூளைமேடு போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையில், `திருமணமான 2 மாதங்களிலேயே எனது மனைவி கர்ப்பம் அடைந்தது பிடிக்கவில்லை. 2 பேரும் சந்தோசமாக வாழ்ந்துவிட்டு, அதன்பிறகு குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்று எவ்வளவோ கூறினேன். என் விருப்பத்தை மீறி என் மனைவி குழந்தை பெற்றுக்கொண்டார். விருப்பமில்லாமல் பிறந்த குழந்தையை நான் கொலை செய்துவிட்டேன்' என்று நிரஞ்சன்குமார் போலீசில் வாக்குமூலம் கொடுத்து குற்றத்தையும் ஒப்புக்கொண்டார். கணவர் நிரஞ்சன்குமார் மீது சங்கீதா போலீசில் பரபரப்பான புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் சைக்கோ மனப்பான்மை உடையவர். திருமணத்திற்கு முன்பே மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுள்ளார். வசதியான குடும்பம் என்பதால், எனது பெற்றோரும் அவசரப்பட்டு என்னை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர். திருமணமாகி அவர் ஒருநாள்கூட என்னிடம் சந்தோசமாக வாழ்க்கை நடத்தியது இல்லை. நான் கருவுற்றவுடன் அந்த செய்தியை சந்தோசமாக சொன்னேன். உடனே அவர் `நமக்கு இப்போது குழந்தை வேண்டாம். குழந்தையை அழித்துவிடு' என்று சொன்னார். `உடனடியாக ஒரு வேலையை தேடிக்கொள்' என்றும் கூறினார். `குழந்தை இறைவன் கொடுத்த செல்வம், அதை நான் ஒருபோதும் அழிக்கமாட்டேன்' என்று நான் உறுதியாக கூறிவிட்டேன். கருவை கலைக்க வேண்டுமென்று தொல்லை கொடுத்து வந்தார். இதுபற்றி எனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தேன். உடனே அவர்கள் என்னை சென்னைக்கு அழைத்து வந்துவிட்டனர். சென்னைக்கு வந்தபிறகு எனது கணவர் என்னிடம் ஒருநாள்கூட போனில் பேசவில்லை. என்னை வந்து பார்க்கவும் இல்லை. இ-மெயிலில் தகவல் அனுப்பினேன். அதற்கும் அவர் பதில் அனுப்பவில்லை. குழந்தை பிறந்தபிறகு அவருடன் செல்போனில் பேச முயற்சித்தேன். செல்போனை `ஆப்' செய்துவிட்டார். குழந்தை பிறந்த 4-வது நாளில் எனது மாமனார், மாமியார் வற்புறுத்தியதால் அவர்களது வீட்டுக்கு வந்தேன். எனது மாமனார், மாமியார் கேட்டுக்கொண்டதன்பேரில், எனது கணவரும் பெங்களூரில் இருந்து வந்தார். ஆனால், என்னிடம் எந்தவித தகராறும் செய்யவில்லை. அதேநேரத்தில் குழந்தையையும் அவர் கையால் தொடவில்லை. திடீரென்று இரவு 11 மணியளவில் குழந்தையை கையில் தூக்கி வைத்துக்கொண்டு முத்தம் கொடுத்து கொஞ்சினார். நானும் அவர் மனம் மாறிவிட்டார் என்று சந்தோசப்பட்டேன். இரவு சந்தோசமாக படுத்தேன். நான் தூங்கும்போது வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் குழந்தையை தூக்கிப்போட்டு கொலை செய்து இருக்கிறார். இனிமேல் அவரோடு வாழமாட்டேன். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் சங்கீதா கூறியுள்ளார். நேற்று காலையில் சூளைமேடு போலீஸ் நிலையத்தில் நிரஞ்சன்குமாரின் உறவினர்களும், சங்கீதாவின் உறவினர்களும் கூடினார்கள். திடீரென்று அவர்களுக்குள் அடி-தடி மோதல் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் செல்வகுமார் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினார். உடனடியாக சூளைமேடு போலீஸ் நிலையத்தில் இருந்து நிரஞ்சன்குமாரை நுங்கம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. சங்கீதாவும் போலீஸ் நிலையத்துக்கு நேரில் வந்திருந்தார். நடந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்தார். கதறி அழுதபடியே இருந்த அவருக்கு போலீசாரும், உறவினர்களும் ஆறுதல் கூறினார்கள். ஆவேசமாக காணப்பட்ட சங்கீதாவின் தந்தை பாலசுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:- எனது மகள் திருமணத்திற்காக ரூ.15 லட்சம் நாங்கள் செலவு செய்தோம். முதலிரவு எங்கள் வீட்டில் நடந்தது. அப்போது தான் நிரஞ்சன்குமார் எங்கள் வீட்டுக்கு வந்தார். அதன்பிறகு அவர் எங்கள் வீட்டுக்கு வரவில்லை. தலைதீபாவளி விருந்துக்கு கூப்பிட்டோம். ரூ.5 லட்சம் கொடுத்தால்தான் தலைதீபாவளி விருந்தில் கலந்து கொள்வேன் என்றும் நிரஞ்சன்குமார் கூறிவிட்டார். அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்போல் இருப்பார். பண ஆசை பிடித்தவர். வேலைக்கு போய் சம்பாதிக்கவேண்டும் என்று எனது மகளுக்கு பெரும் தொல்லை கொடுத்து வந்தார். குழந்தை பெற்ற பிறகு ஒரு ஆண்டு கழித்து நான் வேலைக்கு போகிறேன் என்று எனது மகள் எவ்வளவோ சொல்லி பார்த்தாள். ஆனால், குழந்தையை விரும்பாத அவர், கொலை செய்யும் அளவுக்கு போவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனது மகள் கர்ப்பம் அடைவதற்கு முன்பு நிரஞ்சன்குமார் அம்மை நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு தான் எனது மகள் கர்ப்பம் அடைந்தார். இதை ஒரு அபசகுணம் என்றும், எனவே இந்த குழந்தை வேண்டாம் என்றும் நிரஞ்சன்குமார் சொல்லி வந்தார். குழந்தையை வேண்டாம் என்று எங்களிடம் கொடுத்திருந்தால்கூட, நாங்கள் வளர்த்திருப்போம். 10 மாதம் சுமந்த குழந்தையை அநியாயமாக கொன்றுவிட்டார். இவ்வாறு கதறி அழுதபடியே பாலசுப்பிரமணியம் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |