நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மரணம் ![]() சென்னை, மார்ச்.13- 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த 73 வயது நகைச்சுவை நடிகர் ஓமக்குச்சி நரசிம்மன், சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருடைய உடல் தகனம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. குடும்பம் ஒரு கதம்பம், சம்சாரம் அது மின்சாரம், சூரியன், ஜென்டில்மேன், இந்தியன் உள்பட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்தவர், ஓமக்குச்சி நரசிம்மன். சுருளிராஜன், கவுண்டமணி ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்து இருந்தார். அவர் தொண்டையில் புற்று நோய் ஏற்பட்டது. அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு 9-30 மணிக்கு அவருடைய உடல்நிலை மோசமானது. டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், அவர் மரணம் அடைந்தார். ஓமக்குச்சி நரசிம்மனின் உடல், சென்னை திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் உள்ள அவருடைய வீட்டில், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான ஆண்களும், பெண்களும் அவருடைய உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். நடிகர் சங்கம் சார்பில் பொருளாளர் கே.என்.காளை மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். ஓமக்குச்சி நரசிம்மனின் மகள் நிர்மலா, அமெரிக்காவில் இருக்கிறார். அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அவர் சென்னை வந்ததும், நாளை (சனிக்கிழமை) காலை 11 மணிக்கு, பெசன்ட்நகரில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது. மரணம் அடைந்த ஓமக்குச்சி நரசிம்மனுக்கு வயது 73. அவருக்கு சரஸ்வதி என்ற மனைவியும், காமேஸ்வரன் என்ற மகனும், விஜயலட்சுமி, நிர்மலா, சங்கீதா ஆகிய மூன்று மகள்களும் இருக்கிறார்கள். எல்.ஐ.சி.யில் பணியாற்றி வந்த இவர், ஆரம்ப காலங்களில் நாடகங்களில் நடித்து வந்தார். `நாரதரும் 4 திருடர்களும்' நாடகத்தில், ஓமக்குச்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதில் இருந்து, ஓமக்குச்சி நரசிம்மன் என்று அழைக்கப்பட்டார். `அவ்வையார்' படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். `திருக்கல்யாணம்' என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். ஏராளமான தமிழ் படங்களில் நடித்துள்ள அவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஒரியா, வங்காளம் ஆகிய மொழிகளிலும் நடித்து இருக்கிறார். `இந்தியன் சமர்' என்ற ஆங்கில படம் உள்பட மொத்தம் 1,500-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |