"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ம.தி.மு.க.வில் இருந்து மு.கண்ணப்பன் விலகினார்




பொள்ளாச்சி, மார்ச் 12-

எந்த பிரதிபலனும் பாராமல் தி.மு.க.,வில் உழைக்க தயாராக இருப்பதாக ம.தி.மு.க.,விலிருந்து விலகிய கண்ணப்பன் அறிவித்துள்ளார். பொள்ளாச்சி ஆலாம்பாளையத்திலுள்ள கண்ணப்பன் வீட்டில் அவரை ஸ்டாலின் சந்தித்து பேசினார். ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, கைத்தறித்துறை அமைச்சர் ராமசந்திரன் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடனிருந்தனர். சந்திப்புக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ம.தி.மு.க.,விலிருந்து விலகிய கண்ணப்பனை சந்தித்து தி.மு.க.,வில் மீண்டும் இணைய வேண்டுகோள் விடுக்கும்படி முதல்வர் கருணாநிதி கேட்டுக்கொண்டதற்கிணங்க கண்ணப்பனை சந்தித்ததாக தெரிவித்தார். கண்ணப்பன் மீண்டும் தி.மு.க.,வில் இணைவாரா என்ற கேள்விக்கு அதை அவரிடமே(கண்ணப்பனிடமே) கேட்குமாறு ஸ்டாலின் கூறினார். இதைத்தொடர்ந்து நிருபர்களிடம் பேசிய கண்ணப்பன், முதல்வரின் வேண்டுகோளுக்கிணங்க எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் தி.மு.க.,வில் இணைந்து உழைக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். இணக்கமான நாளில் தனது ஆதரவாளர்களுடன் சென்னையில் நடக்கும் விழாவில் தி.மு.க.,வில் இணையவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ம.தி.மு.க. அவைத்தலைவராக பதவி வகித்து வந்த மு.கண்ணப்பன் பொள்ளாச்சி ஆலாம்பாளையத்தில் உள்ள அவருடைய வீட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

1993-ம் ஆண்டு வைகோவை மையம் கொண்டு எழுந்திட்ட உட்கட்சி பிரச்சினையால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தை உருவாக்கி இந்த நேரம் வரை பல சோதனைகளும், தோல்விகளும் ஏற்பட்ட நேரத்தில் இயக்கத்திற்கு உண்மையானவனாகவும், நம்பிக்கையானவனாகவும் இருந்து வந்திருக்கிறேன் என்பது அனைவருக்கும் தெரியும். மனித நேயத்தோடு முதல்-அமைச்சரை சந்தித்த என்னை நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இருந்து தனிமைப்படுத்தி அ.தி.மு.க. கூட்டணியை உடைப்பதற்கு முதல்-அமைச்சரின் சதிக்கு நான் இரையாகி விட்டதாக பழியும் சுமத்தியிருப்பது எனது வெளிப்படையான, தூய்மையான அரசியல் வாழ்வில் தீராத களங்கத்தை உருவாக்கி இயக்கத்தில் இருந்து வெளியேற்ற திட்டமிடுவதை உணர்கிறேன்.

எனவே பொது செயலாளர் வைகோ நம்பிக்கையின்மைக்கும், வெறுப்பிற்கும் ஆளாகியுள்ள சூழ்நிலையில் ம.தி.மு.க.வின் அவைத்தலைவர் பொறுப்பில் இருந்தும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும், சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நான் விலகிக்கொள்கிறேன். தாங்க முடியாத மனச் சுமையுடனும், வேதனையுடனும் உங்களிடமிருந்து கண்ணீருடன் விடை பெறுகிறேன்.

இவ்வாறு கண்ணப்பன் கூறினார்.

இதன் பின்னர் அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

நீங்கள் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறதே?

அந்த மாதிரி எல்லாம் இல்லை.

ம.தி.மு.க.வில் இருந்து யார்-யார் எல்லாம் விலகுகிறார்கள்?

அது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இங்கு பல தோழர்கள் வந்திருக்கிறார்கள். பல பேருக்கு இதுகுறித்து தகவல் போகவில்லை. இதுகுறித்தும், மேலும், எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இனிமேல் முடிவு செய்யப்படும்.

சட்டமன்ற உறுப்பினர் பதவியை எப்போது ராஜினாமா செய்வீர்கள்?

நாளைய (இன்று) தினம் முறைப்படி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதமும், அதே போல கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதமும் முறையாக தலைமை கழகத்துக்கும், சபாநாயகருக்கும் அனுப்பி வைக்கிறேன்.

1993-ம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து விலகி வந்த போதும், இப்போது ம.தி.மு.க.வில் இருந்து நீங்கள் விலகிய போதும் உங்கள் மனநிலை எப்படி உள்ளது?

என்னுடைய மனநிலை 15 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொண்டன் என்ற முறையில் சில உட்கட்சி பிரச்சினையை சொன்ன போது அது நியாயம் என்றுபட்டது. இதனால் எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல், அவர் இங்கு என்னிடம் வந்து சொன்ன போது மற்ற நிர்வாகிகளுடன் கலந்து பேசி இயக்கத்தை உருவாக்கினோம். அந்த இயக்கத்திலேயே எனக்கு சோதனை வந்திருப்பது ஒரு மிகப் பெரிய வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections