"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

ஐகோர்ட்டுக்கு அருகே இன்று மனித சங்கிலி




சென்னை, மார்ச் 12-

ஐகோர்ட்டில் தாக்குதல் நடத்திய போலீசாரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி, வக்கீல்கள் நேற்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இன்று ஐகோர்ட்டில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். சென்னை ஐகோர்ட்டில் கடந்த 19ம் தேதி, வக்கீல்களுக்கும் போலீசாருக்கும் மோதல் நடந்தது. இதில் வக்கீல்கள், போலீசார், பொதுமக்களும் காயமடைந்தனர். கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன. போலீஸ் அதிகாரிகளை உடனடியாக "சஸ்பெண்ட்' செய்ய வலியுறுத்தி வக்கீல்கள் 20 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று சென்னை மெமோரியல் ஹால் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதில், நூற்றுக்கணக்கான வக்கீல்கள் பங்கேற்று அரசுக்கு எதிரான போராட்டம் நடத்தினர். நிறைவில், சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத் தலைவர் ஆர்.சி.பால்கனகராஜ் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டுக்கு 30-க்கும் மேற்பட்ட தி.மு.க. வக்கீல்கள் கோர்ட்டுக்குப் போனதாக தெரிய வந்துள்ளது. சங்கத்தின் கட்டுப்பாட்டை மீறிவிட்ட அவர்கள் உடனடியாக சஸ்பெண்டு செய்யப்படுவார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதில் சங்கம் தலையிடாது. போலீஸ் அதிகாரிகள் அத்துமீறல், அதிகார துஷ்பிரயோகத்துடன் குற்றமும் செய்துள்ளனர். குற்றம் செய்த அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்வரை இந்தப் போராட்டம் ஓயாது.

எங்களது கோரிக்கைகளை அரசு ஏற்றுக் கொண்டால் அடுத்த நிமிடமே போராட்டத்தை விலக்கிக்கொள்வோம். நீதித்துறையை காப்பாற்ற வலியுறுத்தி நாளை (வியாழக்கிழமை) ஐகோர்ட்டை சுற்றி மனிதசங்கிலி போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு பால்கனகராஜ் கூறினார்.

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க செயலாளர் வேல்முருகன் கூறியதாவது:-

சென்னை ஐகோர்ட்டு சம்பவத்திற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வரும் 20-ந் தேதி மாலை சென்னையில் மாநில அளவிலான பேரணி நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும் வக்கீல்கள் திரளாக கலந்துகொள்கின்றனர். பேரணியின் முடிவில் கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலாவை சந்தித்து மனு கொடுக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections