"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

கிளிநொச்சி அருகே பீரங்கி தளத்தை கைப்பற்றி அழித்த விடுதலைப்புலிகள்




கொழும்பு, மார்ச்.12-

கிளிநொச்சி அருகே அதிரடி தாக்குதல் நடத்திய விடுதலைப்புலிகள், ராணுவ பீரங்கி தளத்தை கைப்பற்றி அழித்தனர். இந்த தாக்குதலில் 50 சிங்கள சிப்பாய்கள் கொல்லப்பட்டனர்.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வன்னிப்பகுதியை கைப்பற்றுவதற்காக, சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிப்பாய்களுடன் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். தொடக்கத்தில் பாதுகாப்பு தாக்குதல் மட்டுமே நடத்திய விடுதலைப்புலிகள், பின்வாங்கிச்சென்றனர்.

தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏறத்தாழ 45 சதுர கிலோமீட்டர் தூர பரப்பளவுக்குள் விடுதலைப்புலிகளை முடக்கிவிட்டதாக ராணுவம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக அலை அலையாக வந்த விடுதலைப்புலிகள் ராணுவத்தின் முற்றுகை வளையத்தை தகர்த்து, ராணுவம் ஏற்கனவே கைப்பற்றிய பகுதிகளுக்குள் ஊடுருவிவிட்டனர்.

ஊடுருவிய விடுதலைப்புலிகள், ராணுவத்தினர் ஏற்கனவே கைப்பற்றியிருந்த கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் ராணுவத்தினரை எதிர்த்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். எதிர்பாராத இந்த அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவத்தினர் பின்வாங்கி வருகிறார்கள்.

கரும்புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கி படையணியை சேர்ந்த விடுதலைப்புலிகள் 600 பேர், கிளிநொச்சி அருகில் உள்ள தேரா என்ற இடத்தில் இயங்கிவந்த சிங்கள ராணுவத்தின் பீரங்கி தளம் மீது அதிரடி தாக்குதல் நடத்தி கைப்பற்றினார்கள்.

அங்கிருந்து கைப்பற்றப்பட்ட 6 பீரங்கிகள் மூலம் சிங்கள ராணுவத்தினரை விரட்டியடித்து, அந்த பீரங்கி தளத்தை முற்றிலுமாக அழித்தனர். திங்கட்கிழமை இரவு முழுவதும் நடைபெற்ற இந்த தாக்குதலில் 50 சிங்கள வீரர்கள் கொல்லப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயம் அடைந்தனர்.

விடுதலைப்புலிகள், ராணுவ கட்டுப்பாடு பகுதியில் 12 கிலோமீட்டர் தூரம் வரை பெருமளவில் ஊடுருவி இருக்கிறார்கள். ஏ-9 தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பலாலி, முகமாலை, கிலாலி பகுதியிலும் விடுதலைப்புலிகள் பீரங்கி தாக்குதல் நடத்தினார்கள்.

இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்தை ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது. கிளிநொச்சியையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் இந்த முக்கிய நெடுஞ்சாலை மீண்டும் மூடப்பட்டு இருப்பது ராணுவத்துக்கு பின்னடைவு என்று கருதப்படுகிறது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections