"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

இலங்கை தமிழர்களுக்காக அ.தி.மு.க. சார்பில் ரூ.1 கோடி










சென்னை, மார்ச் 10-

இலங்கை தமிழர் நலனுக்காக, அ.தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அந்த கட்சியின் பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இலங்கையில் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தியும் அ.தி.மு.க. சார்பில் தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

அதன்படி சென்னையில் சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே நடந்த உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா கலந்து கொண்டார். காலை 9.09 மணிக்கு அவர் உண்ணாவிரத மேடைக்கு வந்தார்.

மேடையில் வைக்கப்பட்டிருந்த இலங்கை தமிழர் உதவி நிதிக்கான உண்டியலில் ஜெயலலிதா ரூ.5 லட்சத்தை போட்டு நிதி திரட்டுவதை தொடங்கி வைத்தார். பின்னர் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து பேசினார்.

மாலை 5 மணிக்கு, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, ஜெயலலிதாவுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். முன்னதாக, நிகழ்ச்சி முடிவில் ஜெயலலிதா பேசியதாவது:-

"இலங்கை தமிழர்களுக்காக நிதி திரட்டுவதற்காக வைக்கப்பட்ட உண்டியலில் காலையில் தனிப்பட்ட முறையில் எனது சொந்த நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கினேன். தற்போது அ.தி.மு.க.வின் பொது செயலாளர் என்ற முறையில், கட்சி சார்பில் இலங்கை தமிழர்களுக்காக ஒரு கோடி ரூபாய் வழங்குகிறேன்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க. சார்பில் இலங்கை தமிழர்களுக்காக திரட்டப்பட்ட நிதி, எங்களுக்கு வந்து சேர்ந்த பின்னர், ஒட்டுமொத்தமாக அதைக் கணக்கு பார்த்து, அந்த ஒட்டுமொத்த தொகை, செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இலங்கை தமிழர்களுக்கு வழங்கப்படும். இலங்கை தமிழர்களுக்காக நாம் நடத்தும் இந்த அறப்போராட்டம் மூலம் அவர்களுக்கான முழுமையாக நமது ஆதரவை தெரிவிக்கும் வகையிலும், அவர்களைக் காப்பாற்றுவதற்காக எந்த நடவடிக்கையையும் எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டிக்கும் வகையிலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி.''

இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.

உண்ணாவிரத மேடையில் அ.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளர்கள் பலருக்கு பேச வாய்ப்பளிக்கப்பட்டது. குண்டு கல்யாணம் பேசுவதற்கு முன்பாக, ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஆசி பெற வந்தார். காலில் விழ வேண்டாம் என்று அவரிடம் ஜெயலலிதா சிரித்தபடி கூறினார். எனவே ஜெயலலிதாவை குனிந்து வணங்கி விட்டு குண்டு கல்யாணம் சென்றார். கொள்கைப் பாடல்களைப் பாடும் பாடகர்களும் அ.தி.மு.க.வினரின் ஆரவாரத்துக்கு இடையே பல பாடல்களைப் பாடினர். ஜெயலலிதாவின் படத்தை ஊக்கால் கோர்த்து உடலில் தொங்கவிட்டபடி சில தொண்டர்கள், ஜெயலலிதா இருந்த மேடைக்கு முன்பு வந்தனர். உடலில் இருந்து அந்த படங்களை உடனடியாக கழற்றும்படி ஜெயலலிதா உத்தரவிட்டார்.

ஜெயலலிதா இருந்த மேடைக்கு எதிரே வைக்கப்பட்டு இருந்த உண்டியலில் ஏராளமான மக்கள் வந்து நிதி அளித்த வண்ணம் இருந்தனர். உண்ணாவிரதம் முடிவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக சசிகலா தனது உறவினருடன் வந்து நிதி அளித்து சென்றார். கட்சி தொண்டர்களின் சிறு குழந்தைகளும் ஜெயலலிதாவிடம் நேரடியாக பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.மாலை 3.30 மணிக்கு ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தனது கட்சியினருடன் வந்தார். சூட்கேசில் கொண்டு வந்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கட்டுக்கட்டாக அவர் உண்டியலில் போட்டார். அந்த கட்சியைச் சேர்ந்த தாணு, தனது பங்குக்கு ஒரு லட்சம் ரூபாயை நிதியாக அளித்தார்.

மேடையில் இருந்த ஜெயலலிதாவுக்கு பெண் தொண்டர்கள் சிலர் ஆரத்தி எடுத்தனர். ஜெயலலிதாவுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்த வைகோ, பழச்சாறு தரும் பெறும் பேரினை பெற வாய்ப்பளித்த ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கூட்டம் முடிந்ததும், மேடையில் அமர்ந்திருந்த கூட்டணி கட்சி தலைவர்களை ஜெயலலிதா தனித்தனியாக சந்தித்து நன்றி கூறினார்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections