"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

மும்பை தாக்குதல் வழக்கு விசாரணை 23-ந் தேதி தொடக்கம் ஜெயிலுக்குள்ளேயே தனி கோர்ட்டு அமைக்கப்பட்டது


Photobucket

மும்பை, மார்ச்.9-

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான விசாரணை வருகிற 23-ந் தேதி முதல் தொடங்குகிறது. இதற்காக, மும்பை ஆர்தர் ரோடு சிறையிலேயே தனி கோர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது.

மும்பையில் கடந்த நவம்பர் 26-ந் தேதி அன்று தீவிரவாதிகள் புகுந்து ரெயில் நிலையம், தாஜ் ஓட்டல் மற்றும் டிரைடென்ட் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்து சரமாரியாக தாக்குதல் நடத்தினர். அதில் 180 பேர் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளுடன் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ வீரர்கள் நடத்திய சண்டையில் முகமது அஜ்மல் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான்.

தற்போது அவன், மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அஜ்மல் மற்றும் 9 பேர் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மும்பை தாக்குதல் தொடர்பாக கடந்த மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 11 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் 2 ஆயிரத்து 202 பேருடைய சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த சூழ்நிலையில், வழக்கை விசாரிப்பதற்காக மும்பை ஆர்தர் ரோடு சிறை வளாகத்துக்கு உள்ளேயே தனி செசன்சு கோர்ட்டு அமைக்கப்பட்டு உள்ளது. அந்த கோர்ட்டில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக முதன் முறையாக தீவிரவாதி அஜ்மல் ஆஜர் படுத்தப்பட்டான். முன்னதாக, நீதிபதி நேரில் வந்து அஜ்மலின் காவலை நீட்டித்தது குறிப்பிடத்தக்கது.

அவனிடம், `உனது பெயர் என்ன' என்று நீதிபதி என்.ஸ்ரீமங்களே கேட்டார். அதற்கு அவன், `எனது பெயர் முகமது அஜ்மல் முகமது அமிர் கசாப்' என்று தெரிவித்தான். அந்த தகவலை நீதிபதி பதிவு செய்து கொண்டார். அதன் பிறகு, `ஆங்கிலம் மற்றும் மராத்தி மொழிகளில் குற்றப்பத்திரிகை இருப்பதால் தன்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் உருது மொழியில் குற்றப்பத்திரிகை வழங்க வேண்டும்' என்றும் நீதிபதியிடம் அஜ்மல் தெரிவித்தான். உடனே, `அது தொடர்பாக சிறப்பு கோர்ட்டில் முறையாக மனு தாக்கல் செய்யலாம்' என்று நீதிபதி கூறினார்.

பின்னர், மும்பை தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை வருகிற 23-ந் தேதி முதல் தொடங்கும் என்று நீதிபதி அறிவித்தார்.

மும்பை ஆர்தர் ரோடு சிறையில் உள்ள `ஆண்டா' என்ற செல்லில் தான் அஜ்மல் அடைக்கப்பட்டு இருக்கிறான். அந்த செல்லில் வேறு சில முக்கிய தீவிரவாதிகளும் உள்ளனர். இதற்கிடையே, அஜ்மலின் உயிருக்கு தீவிரவாதிகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, நவி மும்பையில் புதிதாக அமைக்கப்பட்டு உள்ள தலோஜா சிறைக்கு சில கைதிகளை மாற்ற சிறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி தாவூத்தின் கூட்டாளி அபுசலீம், நிழல் உலக தாதா சோட்டா ராஜனின் கூட்டாளி டி.கே.ராவ் உள்ளிட்டோர் தலோஜா சிறைக்கு மாற்றப்படுகின்றனர். வேறு சிறைகளுக்கு தீவிரவாதிகளை மாற்றி விட்டால் `ஆண்டா செல்'லில் அஜ்மல் மட்டுமே இருப்பான்.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections