"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

58 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி 163 ரன் விளாசினார் சச்சின்




கிறிஸ்ட்சர்ச், மார்ச் 09.03.2009.-

நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில், இந்தியா 58 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. நியூசிலாந்தில் முதல் முறையாக சதம் விளாசிய சச்சின் (163* ரன்) ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

கிறிஸ்ட்சர்ச் ஏஎம்ஐ ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீசியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவியின் (3வது பிரசவம்) அருகில் இருப்பதற்காக, நியூசி. கேப்டன் வெட்டோரி இந்த போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மெக்கல்லம் முதல் முறையாக கேப்டன் பொறுப்பேற்றார். வெட்டோரி, ஓபிரைனுக்கு பதிலாக ஜீதன் பட்டேல், சவுத்தீ அணியில் இடம் பெற்றனர்.

சேவாக் 3, கம்பீர் 15 ரன்னில் வெளியேற இந்திய அணிக்கு அதிர்ச்சி தொடக்கமாக அமைந்தது. பொறுப்புடன் விளையாடிய சச்சின் & யுவராஜ் ஜோடி 3வது விக்கெட்டுக்கு 138 ரன் சேர்த்தது. அதிரடியாக விளையாடிய இருவரும் நியூசி.பந்துவீச்சை சிதறடித்தனர். யுவராஜ் டி20 போட்டியில் விளையாடுவது போல அரை டஜன் சிக்சர் விளாசி அமர்க்களப்படுத்தினார்.அவர் 87 ரன் (60 பந்து, 10 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சச்சினுடன் கேப்டன் டோனி இணைந்தார்.

இவர்களும் அதிரடியைத் தொடர, நியூசி. பந்துவீச்சு சின்னாபின்னமானது. சச்சின் ஒருநாள் போட்டிகளில் தனது 43வது சதத்தை பூர்த்தி செய்தார். நியூசிலாந்து மண்ணில் அவர் அடிக்கும் முதல் சதம் இது. சச்சின் & டோனி ஜோடி 4வது விக்கெட்டுக்கு 135 ரன் சேர்த்தது.

அற்புதமாக விளையாடிய சச்சின் 163 ரன் (133 பந்து, 16 பவுண்டரி, 5 சிக்சர்) எடுத்து, காயம் காரணமாக ஓய்வு பெற்றார். கடைசி கட்டத்தில் ரெய்னா சிக்சர் மழை பொழிய, இந்திய ஸ்கோர் எகிறியது. டோனி 68 ரன் (58 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து அவுட் ஆனார்.

இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 392 ரன் குவித்தது. ரெய்னா 38 ரன், யூசுப் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ரைடர் & மெக்கல்லம் ஜோடி அபாரமான தொடக்கத்தை கொடுத்தது.

இவர்கள் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை இந்திய வீரர்கள் நழுவவிட்டனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 166 ரன் (22 ஓவர்) சேர்த்து மிரட்டியது. மெக்கல்லம் 71 ரன் (68 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ரன் அவுட் ஆனார்.

ஒரு முனையில் ரைடர் பொறுப்புடன் விளையாடி சதம் அடிக்க, அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.ரைடர் 105 ரன் (80 பந்து, 12 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்து ஹர்பஜன் சுழலில் ஜாகீர் வசம் பிடிபட்டார்.

நியூசி. அணி 251 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.கடைசி கட்டத்தில் போராடிய மில்ஸ் 54 ரன் (32 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), சவுத்தீ 32 ரன் (20 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து 45.1 ஓவரில் 334 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா 2&0 என முன்னிலை வகிக்க, 4வது போட்டி ஹாமில்டனில் நாளை மறுநாள் நடக்கிறது.

இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் தனது 2வது அதிகபட்ச ஸ்கோரை (392) நேற்று பதிவு செய்தது. ஒருநாள் போட்டிகளில் நியூசிலாந்தில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

முன்னதாக 2007 உலக கோப்பை போட்டியில், பெர்முடா அணிக்கு எதிராக 413 ரன் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணியுடனான போட்டிகளில் 5வது முறையாக சச்சின் சதம் (43வது) விளாசினார்.

நியூசி. மண்ணில் அவர் அடிக்கும் முதல் சதம் இது. யுவராஜ் 40, டோனி 30வது அரைசதம் விளாசினர். இந்திய இன்னிங்சில் மொத்தம் 18 சிக்சர்கள் விளாசப்பட்டன.

ஒருநாள் போட்டிகளில் இந்தியா மீண்டும் உலக சாதனையை சமன் செய்தது. இந்தியா (2 முறை), தென் ஆப்ரிக்கா, நியூசி. அணிகள் 18 சிக்சர்கள் அடித்துள்ளன.

பெர்முடா அணியுடனான (413 ரன்) உலக கோப்பை போட்டியிலும் (வெ.இண்டீஸ் 2007) இந்தியா 18 சிக்சர் விளாசியுள்ளது.



©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine

send your comments and corrections