"ஆட்சியில் நீடிக்கப்போவதாக காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது' இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் பரதன் கடும் தாக்கு ![]() ஐதராபாத், மார்ச் 8- `ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளப் போவதாக காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது. ஆனால், கடந்த முறை பா.ஜனதா தோற்றதுபோல இந்த முறை காங்கிரஸ் தோல்வி அடையும்' என்று இந்திய கம்யூனிஸ்டு பொது செயலாளர் பரதன் தெரிவித்தார். பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலை முன்னிட்டு இந்திய கம்ïனிஸ்டு கட்சியின் இளைஞர் அணி சார்பாக ஐதராபாத்தில் பிரசார மாநாடு நேற்று தொடங்கியது. மூன்று நாள் நடைபெறும் அந்த மாநாட்டில், `இளைஞர் பாராளுமன்றம்' நடத்தப்பட்டது. மாநாட்டின் தொடக்க விழாவில் கட்சியின் தேசிய பொது செயலாளர் ஏ.பி.பரதன் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது ஆட்சியை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வோம் என்ற கனவுடனும், `இந்தியா ஒளிர்கிறது' என்ற கோஷத்துடனும் தேர்தலை பா.ஜனதா கட்சி சந்தித்தது. ஆனால், அந்த கட்சி வீழ்ச்சி அடைந்தது. மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளப் போவதாக காங்கிரஸ் பகல் கனவு காண்கிறது. பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட கதியே, காங்கிரசுக்கும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் ஏற்படும். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா ஆகிய இரண்டு கட்சிகளுமே தாங்கள்தான் ஒருவருக்கு ஒருவர் மாற்று சக்தி என்று கருதிக் கொண்டு இருக்கின்றன. ஆனால் இடதுசாரிகள் மற்றும் ஒத்த கருத்து கொண்ட கட்சிகள் இணைந்து உண்மையான மாற்று சக்தியாக உருவாகி இருக்கின்றன. மூன்றாவது அணியை `மூன்றாம் தர அணி' என்று பா.ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு விமர்சித்து வருகிறார். இதுபோன்ற மூன்றாம் தர விமர்சனத்தை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும். அவர் தனது நாக்கை அடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவருக்கு தகுந்த பாடம் கற்பிப்போம். சுதந்திரம் அடைந்த சமயத்தில் பல உயரிய தலைவர்கள் பாராளுமன்றத்தை அலங்கரித்தார்கள். தற்போது, அதுபோன்ற உயர்ந்த தலைவர்கள் யாரும் இல்லை. ஆண்டுக்கு 100 நாட்கள் வரை நடைபெற்ற காலம் மாறி 50 முதல் 60 நாட்கள் மட்டுமே பாராளுமன்ற கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் அமளி காரணமாக பெரும்பாலான நேரம் வீணாகி விட்டது. எனினும் பாராளுமன்றத்தில் சரியான முறையிலேயே இடதுசாரிகள் நடந்து வருகின்றனர். நாட்டு நலனை கருத்தில் கொண்டு தனியார் மயமாக்கல் மற்றும் தாராள மயமாக்கல் போன்ற கொள்கைகளை ஆரம்ப கட்டத்திலேயே இடதுசாரிகள் தடுத்து நிறுத்தினர். பாராளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த இளைஞர்கள் அதிக அளவில் அரசியலில் பங்கு பெற வேண்டும். இவ்வாறு ஏ.பி.பரதன் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |