வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கடும் கண்டனம் ![]() சென்னை ஐகோர்ட்டு மோதல் சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையில் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார். இந்த வழக்கு விசாரணையை, சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றி, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. சென்னை ஐகோர்ட்டில் கடந்த மாதம் 19-ந் தேதி போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், இதுபற்றி விசாரிக்க ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பி.என்.ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது. நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னை ஐகோர்ட்டுக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார். மோதலில் சேதம் அடைந்த இடங்களையும் பார்வையிட்டார்.
விசாரணைக்குப்பின் டெல்லி திரும்பிய நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் 22 பக்க இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்தார். மோதல் சம்பவம் பற்றிய பிரதான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை, கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால அறிக்கையில் வக்கீல்கள், போலீசார் ஆகிய இருதரப்பினர் நடவடிக்கைகளுக்கும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கண்டனம் தெரிவித்து இருக்கிறார். அறிக்கையில் அவர் கூறி இருப்பதாவது:- "சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பின்பற்றிய மென்மையான அணுகுமுறைதான் வன்முறைக்கு வழிவகுத்தது என்று முதல் பார்வையிலேயே தோன்றுகிறது. துரதிர்ஷ்டவசமாக, சென்னை ஐகோர்ட்டு தற்காலிக தலைமை நீதிபதி மற்றும் ஐகோர்ட்டு நிர்வாகத்தின் மெத்தன போக்கு, வக்கீல்களுக்கு தவறான சமிக்ஞைகளை அனுப்பியதுடன், அவர்கள் சட்டத்தை மீறும் வகையில் ஊக்கம் அளித்துள்ளது. இலங்கை தமிழர் பிரச்சினையில் இருந்து சாதி பிரச்சினைகள் வரையிலான அரசியல் பிரச்சினைகள், இந்த சூழ்நிலையை தீவிரப்படுத்தி விட்டன என்பதில் சந்தேகமே இல்லை. வக்கீல்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்க கோர்ட்டு வளாகத்தை பயன்படுத்தக்கூடாது என்று ஆரம்பத்திலேயே சொல்லப்பட்டிருக்க வேண்டும். சென்னை ஐகோர்ட்டு நிர்வாகத்தின் மென்மையான அணுகுமுறையால் ஊக்கம் அடைந்த வக்கீல்கள், தாங்கள் கோர்ட்டு வளாகத்தில் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு தப்பித்து விடலாம் என்று நினைத்து விட்டார்கள் போல தோன்றுகிறது. சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டியவர்களாக இருப்பதற்கு மாறாக, அவர்கள் குண்டர்கள், விஷமிகளைப் போல செயல்பட்டுள்ளதாக தோன்றுகிறது. தாங்கள் கோர்ட்டின் அதிகாரிகள் என்றும், தாங்கள் சட்ட நடவடிக்கைக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், எத்தகைய சட்ட விரோதமான செயலையும் செய்து விட்டு, போலீசாருக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லாமல் தப்பி விடலாம் என்றும் வக்கீல்கள் நினைத்து விட்டதுபோல் தோன்றுகிறது. அன்றைய சூழ்நிலையில், பலப்பிரயோகம் செய்ய வேண்டிய நிலைக்கு போலீசார் தள்ளப்பட்டுவிட்டது சந்தேகத்துக்கு இடமற்ற நியாயமாக தோன்றினாலும், போலீசார் திட்டமிட்டு எல்லை மீறி பலப்பிரயோகம் செய்துள்ளனர்.
கலவரத்தில் ஈடுபட்ட வக்கீல்களை ஒடுக்க தடியடி நடத்த உத்தரவு கிடைத்தவுடன், வக்கீல்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட `லைசென்சு' கிடைத்து விட்டதாக போலீசார் நினைத்து விட்டது போல தோன்றுகிறது.
ஐகோர்ட்டு வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் வேண்டும் என்றே வக்கீல்களையும் வக்கீல்களின் அறைகளை தாக்கியதுடன், அவர்களின் சொத்துகளுக்கும் சேதம் விளைவித்து இருக்கிறார்கள். கோர்ட்டின் தரைத்தளத்திலும், முதல் தளத்திலும் வக்கீல்களை விரட்டிச்சென்று இரக்கமின்றி அடித்துள்ளனர். கோர்ட்டு வளாகத்துக்குள் அடித்ததுடன் திருப்தி அடையாமல், வக்கீல்களின் சேம்பர்கள் வழியாக ஓடிச்சென்று திட்டமிட்டு சேதம் விளைவித்துள்ளனர். வக்கீல்கள் போல தோன்றியவர்களை எல்லாம் இழுத்துப்பிடித்து அடித்துள்ளனர். வெறி பிடித்த கூட்டம் போல, போலீசார் திட்டமிட்டு பலப்பிரயோகம் செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் தனித்தனியாக ஒவ்வொரு வக்கீல்களையும், போலீசாரையும் முழுமையாக விசாரிக்கும் வரை, பிரச்சினைக்கு காரணமானவர்கள் யார் என்பதை குறிப்பாக கண்டுபிடிப்பது கடினம். ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி தாக்கப்பட்டதை அடுத்து, தலைமை நீதிபதியின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் ஆயுதப்படை போலீசாரை அனுமதித்தது தவறு என்றாலும், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்களை மன்னிக்கலாம். மோதல் தொடர்பாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வக்கீல்களின் கோரிக்கையில் அடிப்படை ஆதாரம் இருப்பதாக தெரியவில்லை. மாலை 5.14 மணிக்குத்தான் போலீஸ் கமிஷனர் சம்பவ இடத்திற்கு வந்திருக்கிறார். அதன்பிறகு எந்த ஒரு அதிகாரியும் கொடூரமாக நடந்து கொள்ளும்படி போலீசாருக்கு உத்தரவிட்டதாக உருப்படியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. வக்கீல்களின் செயல்பாடுகள், வக்கீல்களை மட்டுமின்றி மனுதாரர்கள் மற்றும் நீதித்துறை நிர்வாகத்தை பாதிப்பதுடன், இறுதியாக சட்டத்தின் ஆட்சியையே பாதிக்கிறது. வக்கீல்கள் நன்னடத்தையுடன் செயல்படும் வகையில், பார் கவுன்சில்கள் எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களின் நடத்தையை தெளிவுபடுத்தும் வகையில், தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி புதிய விதிகளை சுப்ரீம் கோர்ட்டு வகுக்க வேண்டும். இது தொடர்பாக வக்கீல்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் வரை, இந்த விதிமுறைகளை அனைத்து நீதிமன்றங்களும், வக்கீல்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும்.'' இவ்வாறு இடைக்கால அறிக்கையில் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா கூறியுள்ளார். நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தனது அறிக்கையில், ஐகோர்ட்டு மோதலுக்கு பின்னணியாக, இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக கடந்த நவம்பர் மாதத்தில் இருந்தே வக்கீல்கள் நடத்திய பல்வேறு போராட்டங்கள், அவற்றில் ஏற்பட்ட வன்முறை பற்றியும் விரிவாக குறிப்பிட்டு இருக்கிறார். மேலும், தன்னால் இந்த நீதிவிசாரணையை மேற்கொண்டு தொடர முடியாது என்றும் நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா தலைமை நீதிபதியிடம் தெரிவித்து இருக்கிறார்.
ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில், நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எம்.பாஞ்சால் ஆகியோரைக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு முன்னிலையில், ஐகோர்ட்டு மோதல் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வக்கீல்கள் சார்பில் ஆஜரான வைகை, வக்கீல்கள் மீது தடியடி நடத்துவதற்கு காரணமான சென்னை போலீஸ் கமிஷனரை தற்காலிக பதவி நீக்கம் செய்யும்படி வற்புறுத்தினார். மேலும், வன்முறை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் பணிபுரிந்து வரும் நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் வற்புறுத்தினார். உடனே தமிழக அரசு சார்பில் ஆஜரான வக்கீல் வாகன்வதி, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதி பொறுப்பேற்றுள்ள சூழ்நிலையில், கோர்ட்டு புறக்கணிப்பை கைவிட வேண்டும் என்று வக்கீல்களுக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக்கொண்டார். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், வக்கீல்கள் மற்றும் போலீசார் மோதல் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். போலீஸ் கமிஷனரை தற்காலிக பதவி நீக்கம் செய்யும் கோரிக்கை குறித்து எந்த உத்தரவையும் அவர் பிறப்பிக்கவில்லை. 3 நீதிபதிகளைக்கொண்ட சென்னை ஐகோர்ட்டு பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் என்றும், இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிடுவது குறித்தும் சென்னை ஐகோர்ட்டே முடிவு செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டது. |