டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, சுந்தர்ராஜன் கைது ![]() கடலூர், மார்ச்.7- நெல்லை போலீசார் தொடர்ந்த வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருக்கும் டைரக்டர் சீமானுக்கு கடலூர் ஜெயிலில் வீடியோ கான்பரன்சிங் முறையில் நேற்று காவல் நீட்டிப்பு செய்யப்பட்டது. அப்போது சீமானை பார்க்க வந்த சினிமா டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இலங்கை பிரச்சினைக்காக புதுச்சேரியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் டைரக்டர் சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என்று குற்றச்சாட்டு கூறப்பட்டது. இதையொட்டி புதுச்சேரி போலீசார் அவரை கைது செய்து புதுவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தினார்கள். அப்போது, சீமானை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து சீமான் புதுச்சேரி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் ஏற்கனவே நெல்லை போலீசார் தொடர்ந்த வழக்கில் கைதான சீமானின் காவல் நேற்றுடன் முடிந்தது. அவரது காவலை நீடிக்க நெல்லை கோர்ட்டுக்கு போலீசார் அழைத்து செல்ல வேண்டும். நெல்லைக்கு செல்ல அதிக தூரம் இருப்பதால் அவரை வீடியோ கான்பரன்சிங் மூலம் கோர்ட்டில் ஆஜர் படுத்த முடிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து டைரக்டர் சீமான் நேற்று காலை புதுச்சேரி ஜெயிலில் இருந்து கடலூர் மத்திய ஜெயிலுக்கு பலத்த போலீஸ் காவலுடன் அழைத்து வரப்பட்டார். அவர் பகல் 12.15 மணிக்கு கடலூர் ஜெயிலுக்கு வந்தார். அவர் வருவதை அறிந்த பா.ம.க.வினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சீமானை வரவேற்க கடலூர் ஜெயிலுக்கு வந்திருந்தனர். டைரக்டர் சீமானை பார்க்க டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரும் தனி காரில் கடலூர் ஜெயிலுக்கு வந்திருந்தனர். டைரக்டர் சீமான் போலீஸ் வேனில் இருந்து கீழே இறங்கியதும் பா.ம.க.வினர் அவரை வரவேற்று கோஷம் போட்டனர். சீமானை போலீசார் ஜெயிலுக்குள் அழைத்து சென்றனர். அப்போது வன்னியர் சங்க மாநில துணை செயலாளர் திருமால்வளவன், பா.ம.க. மாவட்ட செயலாளர் பஞ்சமூர்த்தி, வன்னியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்த், செயலாளர் கமலநாதன், அலுவலக செயலாளர் போஸ்.ராமச்சந்திரன், நகர செயலாளர் தாண்டவராயன், நகர் மன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஜெயில் முன்பு சீமானுக்கு ஆதரவாக கோஷம் போட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ம.க.வினர் 50 பேரை கைது செய்தனர். பின்னர் 2 போலீஸ் வேன்களில் அவர்களை ஏற்றி முதுநகரில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்து சென்று காவலில் வைத்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது அவர்களுடன் நின்றிருந்த டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரையும் போலீசார் போலீஸ் காரில் ஏறும்படி கூறினார்கள். அப்போது இருவரும், "ஏன் போலீஸ் காரில் ஏற வேண்டும்'' என்று போலீஸ் அதிகாரியிடம் கேட்டனர். அதற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், `உங்களை கைது செய்கிறோம்' என்றார். அப்போது டைரக்டர்கள் இருவரும், ``ஏன் எங்களை கைது செய்ய வேண்டும். நாங்கள் டைரக்டர் சீமானை பார்க்கத்தானே வந்தோம்'' என்று வாக்குவாதம் செய்து பதில் தெரிவித்தனர். இருவரும், "நாங்கள் ஆர்ப்பாட்டமோ, எந்த வித கோஷமோ போடவில்லை'' என்றனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோவன், `நீங்கள் ஆர்ப்பாட்ட கூட்டத்தின் முன்பு நிற்கிறீர்கள். உங்களுக்கு பின்னால் நின்று கொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். உங்கள் தலைமையில்தான் ஆர்ப்பாட்டம் நடந்தது' என்று கூறி டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் மற்றும் அவர்களுடன் வந்த 3 பேரையும் கைது செய்து தனி காரில் ஏற்றி சென்றனர். சிறிது நேரத்தில் டைரக்டர் சீமான் பலத்த போலீஸ் காவலுடன் ஜெயிலை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரிடம் உங்களை பார்க்க வந்த டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோரை போலீசார் கைது செய்து அழைத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது சீமான் நிருபர்களிடம் வருத்தத்துடன் கூறியதாவது:- "என்னை பார்க்க வந்த டைரக்டர்களை கைது செய்தது தேவையற்றது. நெல்லையில் என்மீது போடப்பட்ட வழக்குக்காக வீடியோ கான்பரன்சிங் மூலம் எனது காவலை வருகிற 20-ந் தேதி வரை நீடித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்'' என்று கூறினார். பின்னர் சீமான் பலத்த போலீஸ் காவலுடன் புதுச்சேரி ஜெயிலுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதன்பிறகு மாலையில் டைரக்டர்கள் ஆர்.கே.செல்வமணி, சுந்தர்ராஜன் உள்பட 45 பேரும் விடுவிக்கப்பட்டனர். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |