பெங்களூர் அருகே பயங்கர விமான விபத்து ![]() பெங்களூர், மார்ச்.7- பெங்களூர் அருகே `சரஸ்' ரக குட்டி பயணிகள் விமானம் ஒன்று பரிசோதனை பயணத்தின் போது தரையில் விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த 3 விமானிகளும் உடல் கருகி பலியானார்கள். பெங்களூரில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான என்.ஏ.எல். என்ற நிறுவனம் `சரஸ்' என்ற இலகு ரக சிறிய பயணிகள் விமானத்தை தயாரித்து உள்ளது. இது இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் பயணிகள் விமானம் ஆகும். இதில் 14 இருக்கைகள் உள்ளன. இந்த விமான தயாரிப்பு திட்டத்தின் 2-ம் கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. முழுமையாக தயாரிக்கப்பட்ட விமானத்தை விமானிகள் அவ்வப்போது ஓட்டிச்சென்று பரிசோதனை செய்து வருகிறார்கள். நேற்று பிற்பகலில், `சரஸ்' விமானம் ஒன்று பரிசோதனை பயணத்தில் ஈடுபட்டு இருந்தது. அதில் விங் கமாண்டர்கள் பிரவீண், ஷா மற்றும் இளையராஜா ஆகிய 3 விமானிகள் இருந்தனர். பெங்களூரில் எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு சொந்தமான விமான தளத்தில் இருந்து புறப்பட்டு சென்ற அந்த விமானம், 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பிடதி சேஷகிரிஹள்ளி என்ற கிராமத்தில் உள்ள மெகாசிட்டி லே-அவுட் மீது பறந்து கொண்டு இருந்தது. பிற்பகல் 3.40 மணி அளவில் அந்த விமானம் திடீர் என்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையை நோக்கி வேகமாக வந்தது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறை உணர்ந்து கொண்ட விமானிகள், பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்ப முயற்சி செய்தனர். ஆனால், கண் இமைக்கும் நேரத்தில் அந்த விமானம் தரையில் விழுந்து சுக்கு நூறாக நொறுங்கியது. விமானம் கீழே விழுந்தபோது பயங்கர சத்தம் கேட்டது. விமானம் விழுந்த அடுத்த நொடியில் தீப்பிடித்தது. விமானத்தின் பாகங்கள் நாலாபுறமும் வெடித்து சிதறின. இந்த பயங்கர விபத்தில் விமானத்தில் இருந்த 3 விமானிகளும் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு 3 பேரின் உடல்களும் கருகி சிதைந்து விட்டன. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் 5 வண்டிகளில் விரைந்து வந்து தீயை அணைப்பதில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் விமானம் முற்றிலுமாக எரிந்து விட்டது. விமான விபத்துக்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. என்றாலும் இந்த விபத்திற்கு முழுமையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் பெங்களூர் எச்.ஏ.எல். நிறுவன அதிகாரிகள் ஹெலிகாப்டர் மூலம் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்து நடந்த இடத்தில் அவர்கள் விசாரணை நடத்தினார்கள். கருகிய நிலையில் கிடந்த 3 உடல்களும் மீட்கப்பட்டன. மேலும், விபத்து நடந்த இடத்தில் சிதறி கிடந்த விமானத்தின் பாகங்களை அதிகாரிகள் சேகரித்து விசாரணைக்காக அனுப்பி வைத்து உள்ளனர். தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான விமானி இளையராஜா தமிழ்நாட்டில் உள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இந்த விபத்து குறித்து என்.ஏ.எல். நிறுவன உயர் அதிகாரி நிருபர்களிடம் கூறியதாவது:- இந்த விமானம் 49-வது முறையாக பரிசோதனை பயணத்தில் ஈடுபட்டு இருந்த போது விபத்தில் சிக்கி உள்ளது. விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. நாங்கள் நல்ல அனுபவம் உள்ள 3 விமானிகளை இழந்து விட்டோம். அவர்கள் விமானப்படையில் இருந்து வந்தவர்கள். "சரஸ்" விமான தயாரிப்பு திட்டத்தில் இந்த விபத்து ஒரு பின்னடைவு தான் என்றாலும் அடுத்த கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |