ரூ.9 1/4 கோடிக்கு ஏலத்தில் எடுத்த காந்தி பயன்படுத்திய பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன ![]() ![]() நியூயார்க், மார்ச் 7- காந்தியடிகள் பயன்படுத்திய பொருட்களை, இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா, ரூ.91/4 கோடிக்கு ஏலத்தில் எடுத்தார். அந்த பொருட்கள் இந்தியாவுக்கு கொண்டு வரப்படுகின்றன. தேசப்பிதா காந்தியடிகள் பயன்படுத்திய மூக்கு கண்ணாடி, பாக்கெட் கெடிகாரம், தட்டு, குவளை, செருப்புகள் ஆகிய பொருட்கள், அமெரிக்காவில் நியூயார்க் நகரில் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர் இந்த பொருட்களின் உரிமையாளரான ஜேம்ஸ் ஓடிஸ், ஏலம் விடும் எண்ணத்தை விட்டு விடுவதாகவும், ஏலம் ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்தார். ஆனால், ஏலம் விடும் நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் மரோன், ஏலத்தை நிறுத்த முன்வரவில்லை. எனவே திட்டமிட்டபடி நேற்று ஏலம் நடந்தது. பரபரப்பான இந்த ஏலத்தில் கலந்து கொண்டு, ஏலம் கேட்க திரளான அமெரிக்க வாழ் இந்தியர்கள் கூடினார்கள். பலர் டெலிபோன் மூலம் ஏலம் கேட்டனர். இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் பிரதிநிதியாக டோனி பெடி, இந்த ஏலத்தில் கலந்து கொண்டார். அவருக்கு போட்டியாக, தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் ஏலம் கேட்டுக்கொண்டே இருந்தார். என்றாலும், அதிகபட்சமாக ரூ.91/4 கோடிக்கு, டோனி பெடி ஏலம் கேட்டார். அந்த தொகைக்கு வேறு யாரும் கேட்காததால், காந்தி பயன்படுத்திய பொருட்கள், விஜய் மல்லையாவுக்கு என்று அறிவிக்கப்பட்டது. இதுபற்றி விஜய் மல்லையா கூறுகையில், "இந்த பொருட்களை, இந்திய அரசுக்கு கொடுக்கிறேன். அவை விரைவில் இந்தியா வந்து சேரும்'' என்று, டெல்லியில் கூறினார். காந்தி பயன்படுத்திய பொருட்களை ஏலத்தில் எடுத்து, இந்திய அரசிடம் ஒப்படைக்கப்போவதாக, அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சா வழி தொழில் அதிபர் சத்வால் கூறி இருந்தார். அவர், இந்த ஏலத்தின் போது, டோனி பெடியின் அருகில் இருந்து செயல்பட்டார். இதுபற்றி சத்வால் கூறுகையில், "காந்தி பயன்படுத்திய பொருட்களை, இந்திய தொழில் அதிபர் விஜய் மல்லையா ஏலத்தில் எடுத்து, இந்திய அரசிடம் ஒப்படைக்க இருப்பதாக அறிந்தேன். எனவே நான் ஏலம் கேட்காமல், அவருக்காக டோனி பெடி அருகில் இருந்து, பணிகளை கவனித்தேன்'' என்றார். ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |