தி.மு.க., கூட்டணிக்கு தமிழகத்தில் பெரும் தலைவலியை ஏற்படுத்தும் குறும்படம் மார்ச் 7.- இலங்கைத் தமிழர் பிரச்னையை மையமாக வைத்து காங்.,க்கு எதிராக குறும்படம் தயாரித்து லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த சில கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அரசு இந்த திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறியுமா என தெரியவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொள்கை கொண்ட கட்சியாக அ.தி.மு.க., இருப்பதால் விடுதலை சிறுத்தைகள் மூலம் தி.மு.க., அரசுக்கு பா.ம.க., நெருக்கடி கொடுக்கிறது. தற்போது பழ.நெடுமாறன் தலைமையில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் லோக்சபா தேர்தலில் இலங்கையை மையமாக வைத்து மக்களிடையே பிரசாரம் செய்ய உள்ளது. தமிழ் ஆர்வலர்கள் கொண்ட பல்வேறு அமைப்புகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராக மத்தியில் உள்ள காங்., அரசு செயல்படுவதையும், அதற்கு மாநில அரசு உடன்பட்டிருப்பதையும் குறும் படத்தில் விளக்குவதுடன், தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக கொல்லப்படும் காட்சிகள், பாலியல் பலாத்காரம் செய்யப்படும் பெண்கள், குழந்தைகளை கொன்று குவிப்பது, கைவிரல்களை வெட்டுவது, தமிழ் இளைஞர்களின் தலைகளை துண்டிப்பது போன்ற பதற வைக்கும் காட்சிகளுடன் "சிடி'க்கள் தயாராகி வருகிறது. இதற்காக "டிவி' மற்றும் பத்திரிகைகளில் வெளியான போட்டோக்கள் சேகரிக்கப் பட்டுள்ளன. ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி., ஒருவர் குறும்படத்தில் இடம்பெற வேண்டிய காட்சிகள் குறித்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இதற்கான பிரத்யேக காட்சிகள் அடங்கிய குறும்பட "சிடி'க்கள் மும்பை, சிங்கப்பூர், லண்டன் போன்ற நகரங்களில் ரகசியமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இலங்கைத் தமிழர் பிரச்னை லோக்சபா தேர்தலில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என மத்திய, மாநில உளவுத்துறைகள் அறிக்கை கொடுத்துள்ள நிலையில், தி.மு.க., கூட்டணிக்கு தமிழகத்தில் பெரும் தலைவலியை இந்த குறும்படம் ஏற்படுத்தும் என தெரிகிறது. ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 +91-9841786216 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "Kanavu Thozhil Salai"- Fortnightly Tamil Cinema Magazine send your comments and corrections |