"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

விஜய் டாட் நெட் இணையதளத்தை, அவரது ரசிகர்களே ஒரேநாளில் இழுத்து மூடினர்


நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரது ஆதரவுடன் தொடங்கப்பட்ட விஜய் டாட் நெட் இணையதளத்தை, அவரது ரசிகர்களே ஒரேநாளில் இழுத்து மூடியுள்ளனர். இணையதளத்துக்குத் தேவையான சிறப்புச் செய்திகள் மற்றும் படங்கள் தருவதில் விஜய் தரப்பிடம் இருந்து எந்த உதவியும் கிடைக்காததாலும், இனியும் நஷ்டத்தைத் தாங்க முடியாது என்பதாலுமே தளத்தை மூடுவதாக, இதுவரை தளத்தை நடத்தி வந்த அவரது தீவிர ரசிகர்கள் அறிவித்துள்ளனர். விஜய்நெட் டாட் காம் மூடல் அறிவிப்பில், "ஆரம்பத்தில் இந்தத் தளத்தைத் துவங்க விஜய் மற்றும் அவரது தந்தை உள்ளிட்டோர் பெரும் ஆதரவு அளித்து வந்தனர். ஆனால் திடீரென்று இப்போது முற்றிலுமாக நிறுத்திக் கொண்டனர். அதுமட்டுமல்ல, இந்த தளத்துக்காக நாங்கள் செய்யும் கடின உழைப்புக்கான பலனை வேறு யாரோ தட்டிச் செல்கிறார்கள். எந்தவித நிதி வசதியுமின்றி சக மாணவர்களை ஒன்றிணைத்து மிகவும் கஷ்டப்பட்டு எங்கள் சொந்த முயற்சியில் நடத்திய இணைய தளம் இது. இப்போதும் கூட பணத்தை எதிர்பார்க்காமல் நடத்தத் தயாராகவே உள்ளோம். ஆனால் எங்களுக்குக் கிடைக்க வேண்டிய அங்கீகாரம் வேறு யாருக்கோ போய்ச் சேர விடமாட்டோம். விஜய்யை வளரவிடக்கூடாது என்ற எண்ணத்தோடு ஒரு கூட்டம் அவரைச் சுற்றிலும் உள்ளது. அவர்களோடு மோதிக் கொண்டிருப்பதை நாங்கள் விரும்பவில்லை. இவற்றையெல்லாம் முடிந்தவரை சமாளிக்கவே நாங்கள் முயன்றோம். ஆனால் நிலைமை இப்போது கைமீறிப் போய்விட்டது. எங்களுக்கென்று ஒரு வாழ்க்கை, வீடு மற்றும் கடமைகள் உள்ளன. இனி அவற்றுக்குத்தான் முதலிடம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்கள் பலரும் வலையுலகிலும் வலம் வருவதற்காக தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வரும் சூழலில், விஜய் இணையதளத்தை இதுவரை நடத்தி வந்த அவரது ரசிகர்களே மூடியிருப்பது கோலிவுட்டையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது!










©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections