"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

சர்வதேச திரைப்பட விழா ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை, உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (17-12-2008) தொடங்கி வைத்தார்.

இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் சார்பில், 6வது சர்வதேச திரைப்பட விழா கலைவாணர் அரங்கில் நேற்று மாலை தொடங்கியது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில், 35 நாடுகளை சேர்ந்த 120 படங்கள் திரையிடப்படுகின்றன. விழாவை அமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஸ்டாலின் பேசியதாவது:

கடந்த 1976 முதல் இந்த கழகம் செயல்படுகிறது. ஒவ்வொரு முறையும் இந்த விழா நடத்த நிதி கிடைக்காமல் சிரமப்பட்டு வந்தார்கள். இன்று அந்த நிலை இல்லை. திரைப்பட விழாவுக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் வழங்கி உள்ளது.

‘அஞ்சாதே’ தமிழ்ப் படம் முதலில் திரையிடப்படுகிறது. தவிர ‘சுப்பிரமணியபுரம்’, ‘பூ’, ‘காஞ்சிபுரம்’ போன்ற படங்கள் திரையிடப்படுகின்றன. மொழி, கலை, கலாசாரம், பண்பாட்டின் சின்னமாக திரைப்படம் விளங்குகிறது. கிராம மக்களும் திரைப்படங்களை காண வேண்டும் என்பதற்காகதான் அரசு இலவச தொலைக்காட்சி பெட்டிகளை வழங்கி வருகிறது.

திரைப்படத் துறை வளர்ச்சிக்காக, சிறந்த திரைப்படங்களுக்கான விருது தொகையை ரூ.1.25 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக தமிழக அரசு உயர்த்தி இருக்கிறது. 2வது பரிசான 75 ஆயிரத்தை 1 லட்சமாகவும், 3வது பரிசு 50 ஆயிரத்தை 75 ஆயிரமாகவும், சிறப்பு பரிசு ரூ.50 ஆயிரத்தை 75 ஆயிரமாகவும் உயர்த்தி வழங்குகிறது. கலைஞர்களுக்கு ஊக்கம் அளிக்க தங்க பதக்கம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு அமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

எஸ்.வி.சேகர் பேசுகையில், “இந்த விழா நிதிப்பற்றாக்குறை இல்லாமல் சிறப்பாக நடக்க காரணம் முதல்வர்தான். அதற்காக முதல்வருக்கு நன்றி. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு இலவச அனுமதி. மற்றவர்களுக்கு ரூ.3 கட்டணம் வசூலிக்கப்படும்” என்றார்.

அமைச்சர் பரிதி இளம்வழுதி, அமெரிக்க துணை தூதர் பிரெட்ரிக் கப்லான் ஆகியோர் பேசினர். இந்திய திரைப்பட திறனாய்வு கழக தலைவர் எஸ்.கண்ணன் வரவேற்றார்.














































































©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119
+91-9841786216
No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections