"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"வேள்வி" - திரை விமர்சனம்










அநியாயத்தை தட்டிக் கேட்கும் புதுமைப் பெண் ஹீரோயின் ஹாசினி. இதனால் ரவுடிகள் சிலரை பகைத்துக் கொள்கிறார். விளைவு திருமணநாள் அன்று கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிடுகிறார்கள். இதனால் காதலனும் கைகழுவுகிறான். மனமுடைந்த பெற்றோர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். நிர்கதியாக நிற்கும் அவள் பாரதியின் புதுமைப் பெண்ணாக புறப்படுகிறார்.

‘பகையாளி குடும்பத்தை உறவாடிக் கெடு’ என்ற பார்முலாவில் தன் வாழ்வை கெடுத்தவர்களை பழிக்கு பழி வாங்குகிறார். தன்னை புறக்கணித்த காதலனுக்கு பயங்கரமான ‘அதிர்ச்சி’ வைத்தியம் கொடுத்துவிட்டு தூக்கு மேடைக்குச் செல்கிறார்.

கற்பென்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானது என்ற கருத்தை சொல்ல வந்த இயக்குனர், தலையை சுற்றி மூக்கை தொட்டிருக்கிறார்.

ஆங்கிலபட பாணியிலான மூன்று கொலைகளுடன் விறுவிறுப்பாக தொடங்கும் படம் அதற்கான காரணத்தை சொல்லும் பிளாஷ் பேக்கில் சுணங்குகிறது. வழக்கமான காலேஜ் காதல், மோதல், காமெடி, டூயட் என்று சுணங்குகிறது.

ஹீரோயினை மையமாக கொண்ட கதையில் புதுமுகம் ஹாசினி நடிப்பு கிலோ என்ன விலை என்று கேட்கிறார். அழுகைக்கும், சிரிப்புக்கும் ஒரே மாதிரியான முகம் காட்டி புதுமை செய்கிறார். ஹீரோ விஷ்வா பரவாயில்லை. கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் ஜீப்பில் காமெடி பண்ணிக்கொண்டு திரிகிறது ‘சிரிப்பு’ போலீஸ்.

சட்டம் படிக்கும் தாதாக்கள் கல்யாண மண்டபத்திலிருந்து பெண்ணை கடத்திக் கொண்டு போய் பலாத்காரம் செய்து மண்டப வாசலிலேயே தள்ளிவிட்டு போவதும், பெற்றவர்கள் போலீசுக்கு போகாமல் திருமணம் பற்றி பக்கம் பக்கமாக வசனம் பேசிக் கொண்டிருப்பதும் சரியான காமெடி.

புதுமுக இசை அமைப்பாளர் ஜே.கே.செல்வா பின்னணி இசையில் ஆச்சர்யப்படுத்துகிறார். நாசுக்காக பேச வேண்டிய வசனத்தை நா கூசப் பேசுகிறார்கள். அறிமுக இயக்குனர் ஜீன்ஸ் காட்சி கோணங்களில் மட்டும் கவனம் ஈர்க்கிறார்.

நடிப்பு : விஷ்பா, ஹாசினி, காதல் சுகுமார்

தயாரிப்பு : போர்த் டைமன்ஷன் அகாடமி

இயக்கம் : ஜீன்ஸ் இசை : ஜே.கே.செல்வா











©2008

All Rights Reserved

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections