"எல்லாம் அவன் செயல்" - திரை விமர்சனம் ![]() ![]() ![]() ![]() ![]() மலையாளத்தில் வெளியான 'சிந்தாமணி கொலை கேஸ்' படத்தின் ரீ மேக் என்றாலும், தமிழுக்கு ஏற்ப மாற்றியிருக்கின்றனர். பயங்கர குற்றவாளிகளை சட்டத்திலிருந்து தப்பிக்க வைத்து, தர்மத்தின் முன் நிறுத்தி தானே தண்டனை தரும் வித்தியாசமான அதிரடி வக்கீல் ஆர்.கே! அவரிடம் வருகிறது சிந்தாமணி கொலை வழக்கு. மெடிக்கல் காலேஜ் படிக்க வரும் அப்பாவி கிராமத்து பெண் சிந்தாமணியை, அதே கல்லூரியில் படிக்கும் பணக்கார மாணவிகள் ராக்கிங் செய்ய, அதில் அவள் உயிரிழக்கிறாள். இந்த வழக்கில் ஆஜராகும் ஆர்.கே, 9 பணக்கார மாணவிகளுக்கும் விடுதலை வாங்கித் தருகிறார். அடுத்து 9 பேரையும் போட்டுத் தள்ளப்போகிறார் என்று எதிர்பார்க்கும்போது அதிரடி திருப்பம். அவர் போட்டுத் தள்ளுவது வேறு சிலரை. ‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘நான் சிவப்பு மனிதன்’ வரிசையில் சட்டத்தை வைத்து சதுரங்கம் ஆடியிருக்கும் படம். கிரிமினல்களை விடுவிக்கும் வழக்கறிஞராக வரும் ஆர்.கே. நீதிமன்ற காட்சிகளில் பரபரக்கிறார். அவரது ஆக்ஷன் அவதாரமும் திக்.மெல்லிய சிரிப்பு, குளோஸ்-அப் பார்வை, அனல் பறக்கும் விவாதம், அதிரடி மிரட்டல் என ஆச்சர்யம் தருகிறார் ஆர்.கே. சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கிறது முதல் பாதி படம். இரண்டாம் பாதியில் தொடங்கும் நீதிமன்ற காட்சிகள் புத்திசாலிதனத்துக்கு தீனி போடுகிறது. அடுத்து என்ன? என்கிற ஆவலை அநியாயத்துக்கு தூண்டும் காட்சிகளால் சபாஷ் பெறுகிறார் இயக்குனர். வசனங்களில் அழுத்தம் கொடுத்து சாட்சிகளை தவிடுபொடியாக்கும் ஆர்.கே. மனதில் பதிகிறார். ஆவேச வசனங்களுக்கு அவரது குரல் நூறு சதவீதம் கைகொடுக்கிறது. பாமாவை கல்லூரியிலிருந்து விரட்ட, பணக்கார பெண்கள் 9 பேர் நடத்தும் ராக்கிங் கச்சேரி கதையை திசை திருப்புகிறது. சோதனை கூடத்தில் பிணத்துக்கு மாலை போட வைத்து பாமாவை பயமுறுத்துவதும், முகம் முழுவதும் சாயம் பூசி நடுங்கச் செய்யும் காட்டுத்தனமும், உடலை துண்டு துண்டாக வெட்டி ஏரியில் வீசுவதும் திகில். பணக்காரப் பெண்களாக வரும் 9 பேரும் தனித்தனியாக தங்களை அடையாளம் காட்டுகின்றனர். மூன்றே சீன்களில் வந்தாலும் முத்திரை பதிக்கிறார் ரகுவரன். துடைத்து வைத்த குத்துவிளக்காக பளபளக்கும் பாமா, தமிழுக்கு இன்னொரு குடும்ப வரவு! அழகை தந்து, அனுதாபத்தை அள்ளிக்கொண்டு போகிறார்.ராக்கிங் கொடுமையில் சிக்கி தவிக்கும்போது அடி நெஞ்சில் வலிக்கிறது. போலீஸ் அதிகாரி நாசரால் குற்றப்பத்திரிகையில் புனையப்பட்ட கதையையும், நிஜத்தில் நடந்தது என்ன? என்பதையும் காட்சிகளாகவே சித்தரிப்பதால் எது நிஜம்? எது பொய்? என்ற குழப்பத்தை தவிர்த்திருக்கலாம். கதறி அழுது சென்டிமென்ட்டுக்கு தோள் கொடுக்கிறார் மணிவண்ணன். வண்டு முருகனாக வரும் வடிவேலுவின் பாலிடிக்ஸ் காமெடி சரவெடி! மனோஜ் கே.ஜெயன், ஆசிஷ் வித்யார்த்திதான் குற்றவாளிகள் என்ற உண்மை அம்பலமானதும் கிளைமாக்ஸ் சண்டைக்கு லீடு கிடைத்துவிடுகிறது. ஷாஜி கைலாஷின் இயக்கம் வழக்கம்போல் மணக்கிறது. 'அரசாங்கம் நடத்த வேண்டிய கல்லூரியை தனியார் நடத்தறதாலயும், தனியார் நடத்தவேண்டிய சாராய பேக்டரியை அரசாங்கம் நடத்தறதாலயும்தான் இவ்வளவு குழப்பமும் என்ற வசனத்தால் அப்ளாஸ் அள்ளுகிறார் வசனகர்த்தா வி.பிரபாகர். ஆக்ஷன் படத்துக்கும் ஹீரோ முக்கியமில்லை; கதைதான் முக்கியம் என்பதை அடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஷாஜி கைலாஷ். நடிப்பு: ஆர்.கே, பாமா, ஆசிஷ் வித்யார்த்தி, வடிவேலு, நாசர்,மணிவண்ணன். தயாரிப்பு : ஆர்.கே.ஆர்ட்ஸ்.டைரக்ஷன் : ஷாஜி கைலாஷ்.இசை : வித்யாசாகர். ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |