"சேவல்" - திரை விமர்சனம் ![]() ![]() ![]() ![]() பூ விற்பனை செய்யும் ராஜேஷ் மகன்கள் பரத், வடிவேலு. வேலை வெட்டியில்லாமல் வம்பிழுத்துக்கொண்டு சுற்றுகிறார் பரத். போஸ்ட்மேன் வேலை வடிவேலுவுக்கு. கோயில் அர்ச்சகர் ஒய்.ஜி.மகேந்திரன் மகள் பூனம் பஜ்வா மீது பரத்துக்கு காதல். முதலில் வெறுக்கும் பூனம் சினிமா இலக்கணபடி பிறகு காதல் கொள்கிறார். இந்நிலையில் பூனம்மின் அக்கா சிம்ரனுக்கு புற்றுநோய் இருப்பதால், அவரது கணவர் பிரேமுக்கு பூனத்தை இரண்டாம் தாரமாக கட்டி வைக்க முடிவு செய்கின்றனர். சூழ்நிலையை கருதி பரத்தும் காதலை தியாகம் செய்கிறார். இதற்கிடையில் ஊர் பெரும்புள்ளி சம்பத்தும், சிம்ரனின் மச்சான் கிருஷ்ணாவும் பூனத்தை அடைய துடிக்கின்றனர். துடிக்கிறார்களா... அவர்களின் வலையில் பூனம் சிக்கியதை அறிந்த பரத், அரிவாளும் கையுமாக கொதித்தெழுந்து பழி தீர்ப்பதுதான் கதை. காதலிக்கும் பெண்ணை வில்லன் கூட்டத்திடமிருந்து ஹீரோ காப்பாற்றுவது என்ற ஒற்றை வரிக் கதையை, மைல் கணக்கில் டர்ரென சுற்றிவந்து சொல்லி இருக்கிறார்கள். 'காதல்' படத்துக்கு பிறகு அழுக்கு பையனாக வருகிறார் பரத். திருட்டு குற்றத்துக்காக தன்னை கட்டி வைத்து அடித்தவர்களை துரத்தி துரத்தி அடிக்கும்போது வேகம்! அப்பாவுக்கு அடங்காத பிள்ளையாக, எந்நேரமும் தகராறும், வம்புமாக காலத்தை கழிக்கிறார். பாளையங்கோட்டை ஜெயிலிருந்து கனமான கண்ணாடி, தாடி, பரட்டை தலை என காய்ந்த சருகாக வெளியில் வரும் பரத்தின் பிளாஷ்பேக், எந்த பக்கம் செல்வதென்று தெரியாமல், குழம்பி குழம்பி எங்கெங்கோ போய் நிற்கிறது. ஆற்றில் குளித்துக்கொண்டிருக்கும் கிருஷ்ணாவை கழுத்தை அறுத்து கொல்லும்போது 'எதற்காக இவரை கொல்கிறார்?' என்ற குழப்பத்தில் தொடங்கும் படம், சண்முகராஜன் மீது டிராக்டர் ஏற்றி கொல்வது, பிளாஷ்பேக்கிலேயே மறுபடியும் மறுபடியும் ஜெயிலுக்கு செல்வது என, தண்டவாளத்தை விட்டிறங்கிய ரயிலாக சிதறிப்போகிறது காட்சிகள். பரத்துக்கும், சிம்ரனுக்கும் இடையே பெரிய மோதல் நடக்கப்போகிறது என்று எதிர்பார்த்தால் திடீரென்று சிம்ரனுக்கு புற்றுநோய் என்று சொல்லி, புஸ் ஆக்கி விடுகிறார்கள். அழுது புலம்பி, அனாவசியமாக உயிர்விடுகிறார் சிம்ஸ்! அழகாக, குடும்ப பாங்காக வருகிறார் பூனம் பஜ்வா. தாவணி, பாவடையில் பள்ளி மாணவியாக பளபளக்கிறார். குளியல் காட்சி, மானபங்க காட்சியென கவர்ச்சிக்கு நோ பஞ்சம்! போஸ்ட்மேனாக வந்து காமெடி செய்வதைவிட தம்பியின் காதலுக்கு தூதுவனாகி சென்டிமென்ட்டில் மூழ்கிப்போகிறார் வடிவேலு. இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் தன்னை அடையாளம் காட்டிக்கொள்கிறார். எடிட்டர் வி.டி.விஜயனின் கத்தரிக்குத்தான் நிறைய வேலை பெண்டிங். கதை சொன்னவிதத்திலும், திரைக்கதையிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் ஹரி. காட்சி அமைப்பிலும், திரைக்கதையிலும் உள்ள ஓட்டையால் படம் கூவாத சேவலாகியிருக்கிறது. ![]() ![]() ![]() ![]() ©2008 All Rights Reserved News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276 +91-9176186119 No part of this website may be reproduced or used in any form without permission DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"- FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE send your comments and corrections |