"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

"மகேஷ், சரண்யா மற்றும் பலர்"- திரை விமர்சனம்










கும்பகோணத்திலிருந்து படிப்புக்காக சென்னை வரும் ஷக்திக்கு, சந்தியாவுடன் காதல். ஷக்தியின் தங்கை சரண்யாவுக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்த்து நிச்சயிக்கின்றனர். அதே நேரம் மாப்பிள்ளையின் தங்கை கீர்த்தி சாவ்லாவுக்கும் திருமண ஏற்பாடு நடக்கிறது.

ஒரே மேடையில் இரண்டு திருமணம் நடக்கும் நேரத்தில் கீர்த்திக்கு பார்த்த மாப்பிள்ளை மாயமாகிறார். மணக்கோலத்தில் கலங்கி நிற்கும் கீர்த்தியை மணந்துகொள்ளும்படி ஷக்தியிடம் அவரது குடும்பமே கெஞ்சுகிறது. 'சந்தியாவின் காதலை மறந்துவிட்டு கீர்த்தியை மணக்க முடியாது' என்று ஷக்தி கூற, குடும்பமே அவரை வெறுத்து ஒதுக்குகிறது. இதற்கிடையில் சரண்யாவின் மாப்பிள்ளையிடம் நேரில் சந்தித்து நிலைமையை விளக்குகிறார் ஷக்தி. இந்த குழப்பம் எப்படி தீர்கிறது என்பது படம்.

இளமை துள்ளலுடன் வரும் ஷக்திக்கு ஜாடிக்கேத்த மூடியாக சந்தியா. அவரது விலாசத்தை கண்டுபிடிக்க ஷக்தியும், சந்தானமும் கையாளும் யுக்திகள் வில்லங்கமாவது கலகல. ரிஸப்சனிஸ்ட் கழுத்தில் கத்தியை வைத்து, சந்தியாவின் முகவரியை கேட்கும் ஷக்தியிடம் தன்வீட்டு முகவரியை கொடுத்து தந்தையிடம் மாட்டிவிடுவது பஞ்ச் காமெடி.

'நீ யாரையாவது சைட் அடிச்சிருக்கியா?' என்று ஆரம்பித்து, தான் சந்தியாவை சைட் அடித்த விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமாக தங்கை சரண்யாவிடம் ஷக்தி சொல்வது ஜிவ். 'சைட்' விவகாரம் அண்ணி, அக்கா, அம்மா, தாத்தா, அப்பா என எல்லோருக்கும் பரவியதும் ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு சம்பவமாக ஷக்தி சொல்வதில் அடிக்கரும்பின் ருசி.

இப்ப ஆக்சிடெண்ட் நடக்கும், இப்ப திருமணம் நிற்கப்போகிறது என்று சில கணிப்புகள் சரியாக பொருந்தினாலும் ரெயில் நிலையத்தில் சந்தியாவின் கழுத்தில் வெட்டு விழப்போகிறது, ஷக்தி கொலை குற்றவாளியாகப்போகிறார் என்பதை யூகிக்க முடியவில்லை.

ஷக்தி-சந்தியா இருவருக்கும் இடையே நடக்கும் காதல் யுத்தம் அமுது. அப்பாவித்தனம், சுட்டித்தனம் என சந்தியா வித்தியாசப்படுகிறார். கிளைமாஸில் கழுத்தறுபட்டு திணறும்போது சென்டிமென்ட்டை அள்ளுகிறார்.

தனக்கு வரும் மாப்பிள்ளையை, அண்ணன் ஷக்தி பார்த்து சொன்னால்போதும் என்று சொல்லும் சரண்யா, திருமணத்தின்போது அவரது பார்வை கூட தன்மீது பட்டால் பாவம் என்பதுபோல் உர்ராவது விர்.

கேள்விக்குறியாக வந்து ஆச்சர்யக்குறியாகிறார் கீர்த்தி சாவ்லா. வீட்டோடு மாப்பிள்ளையை குத்திக்காட்டும் பெருசின் லொள்ளு குபீர்.

சரண்யாவின் ஆக்ஸிடன்ட் காட்சிகள், போனில் பேசிய வசனத்தையே மீண்டும் காட்சிகளாக ரிபீட் செய்வது, ஆஸ்பத்திரி பில்டப் போன்றவற்றுக்கு தாராளமாக கத்தரி போட்டிருக்கலாம்.

கும்பகோணத்து பையனுக்கும் சென்னை பெண்ணுக்கும் காதல் என்பதில் முக்கியத்துவம் இல்லாதது மைனஸ். வித்யாசாகர் இசையில் 'என் பாடல்.. 'இனிப்பு. கே.மோகன்குமாரின் ஒளிப்பதிவு ஓ.கே. சோகமான காதல் கதையை கிளைமாக்ஸ் வரை ஜாலியாக சொல்லும் புதுபார்முலாவில் வெற்றி பெறுகிறார் இயக்குனர் பி.வி.ரவி.

நடிப்பு: ஷக்தி, சந்தியா, கீர்த்தி சாவ்லா, சரண்யா,'கல்யாண மாலை' மோகன், சந்தானம், வினோதினி.தயாரிப்பு: சித.செண்பககுமார்

இசை: வித்யாசாகர். டைரக்ஷன்:பி.வி.ரவி











©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections