"கனவு தொழிற்சாலை" - தமிழ் சினிமா மாதமிருமுறை இதழ்.

'பூ' - திரை விமர்சனம்












'மாமன் மகன்தான் நீ கல்யாணம் பண்ணிக்கப்போறவன்' என சிறு வயதில் அம்மா சொன்னதை வாழ்க்கையாக்கிக் கொள்கிறார் பார்வதி.

மாமன் மகன் ஸ்ரீகாந்த் மீதான பாசம், பார்வதியின் இதயத்திலிருந்து நேராக சென்று அவரது மூளையை சலவை செய்கிறது. விளைவு, வெறித்தனமாக ஸ்ரீகாந்தை எண்ணி நிமிடங்களை கழிக்கிறார் பார்வதி. அவரது வயதுடன் சேர்ந்து ஸ்ரீ மீதான காதலும் வளர்கிறது.

பட்டாசு தொழிற்சாலையில் தன்னுடன் வேலை பார்க்கும் தோழி, 'ஸ்ரீ இன்ஜினியருக்கு படிக்கிறான். அவன் உனக்கு கிடைப்பானா?' என உசுப்பிவிடுகிறார். தோழியின் மண்டையை உடைத்துவிடுகிறார் பார்வதி. தன் மனதுக்குள் மட்டுமே புதைத்து வைத்திருக்கும் ஸ்ரீ மீதான காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கிறார். ஆனால் அதை புரிந்துகொள்கிறார் ஸ்ரீகாந்த்.

அப்போதுதான் தன்னுடைய முதலாளியுடனே சம்பந்தம் வைத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது ஸ்ரீகாந்தின் ஏழை அப்பாவுக்கு. அப்பாவின் ஆசையை நிறைவேற்றுவதா, பார்வதியை கல்யாணம் செய்வதா என குழம்புகிறார் ஸ்ரீ. சந்தர்ப்பங்கள் பார்வதிக்கு எதிராக மாறுகிறது. முதலாளியின் மகளுக்கு தனது மகனை திருமணம் செய்துவைக்கிறார் ஸ்ரீகாந்தின் அப்பா.

ஸ்ரீகாந்தின் சந்தோஷத்திற்காக, இதையும் பக்குவமாக ஏற்று கொள்கிறார் பார்வதி. ஆனால், ஸ்ரீகாந்தின் கல்யாணத்துக்கு பிறகு நடக்கும் தலைகீழ் மாற்றங்கள் ஷாக் ஆக்குகிறது பார்வதியை. பிறகென்ன என்பது படம்.

மாரி, தங்கராசு பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர் பார்வதியும், ஸ்ரீகாந்த்தும். 'மாமா மேல உசிரையே வச்சிருக்கேன்' என்பதை வசனமாக பேசாமல் வாழ்க்கையாக கண்முன் நிறுத்தும் பார்வதி தமிழ் திரையில் பூத்திருக்கும் குறிஞ்சிப்பூ. மலையாளத்தில் 'நோட்புக்', 'அவுட் ஆஃப் சிலபஸ்' படங்களில் நடித்தவர். தமிழில் முதல் படத்திலேயே பேச வைத்துவிடுகிறார்.

'மனசுல இருக்கறதை கடுதாசியா எழுதிகொடு, அத தங்கராசுகிட்ட கொடுக்கிறேன்' என்று தோழி கொடுத்த ஐடியாப்படி, காகிதத்தில், 'அன்புள்ள' என்று வார்த்தையை தொடங்கும் பார்வதி, அதற்குமேல் என்ன எழுதுவதென்று தெரியாமல் கடிதத்தை முடிக்கும்போது அந்த வெற்று கோடுகளில் உள்ள காதலின் ஆழம் கண்ணுக்குள் பதிகிறது.

மாமன் ஸ்ரீகாந்த்தின் உயரத்துக்கு தான் இல்லை என்பதால் சுவற்றில் கோடு வரைந்து, விரலில் அளவெடுக்கும் பார்வதி, வேலை செய்யும் இடத்தில் ஃபோர்மேன் உயரத்தை கணக்கு வைத்து அவர் அருகில் வெறும் காலில் நடந்தும், ஹைஹீல்ஸ் போட்டு நடந்தும் அளவு பார்க்கும் அழகும், 'கள்ளிப்பழத்தை கொடுத்து உம் மாமனை கவுத்திடலாம்' என்று சொல்லும் தோழியின் இன்னொரு ஐடியாவை நிறைவேற்ற, நள்ளிரவிலும் காடு, கழனியில் தேடிச் சென்று கள்ளிப் பழம் பறிக்கும் துணிச்சலும் பார்வதியின் நடிப்புக்கு பட்டம் வாங்கி தருகிறது.

'தங்கராசுக்குதான் கல்யாணமாயிடுச்சே, நீபோய் எதுக்கு பாக்கறே' என்று தோழி கேள்வி எழுப்பியதும், 'கல்யாணமானா என்ன? பாக்கக் கூடாதா?' என்று மறுகேள்வி எழுப்பி தன் மனதில் கலங்கம் இல்லை என்பதை பார்வதி புரியவைப்பது டைரக்டர் டச்.

மனைவியுடன் ஸ்ரீகாந்த் சந்தோஷமாக இல்லை என்று தெரிந்ததும் வானமே இடிந்ததுபோல் கதறும் பார்வதியின் கண்களில் வழியும் கண்ணீரை துடைக்க கைகள் நீள்கிறது.

ஸ்ரீகாந்த்துக்கு காட்சிகள் குறைவு. ஆனால் படம் முழுவதுமே தங்கராசு கேரக்டர் மூலம் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

'மாரி இருக்கா, சத்தம்போடாதே... அவளுக்கு கேட்றப்போவுது' என்று மனைவி சரிதாவின் ஆணவப்பேச்சுக்கு அணைபோட நினைப்பதும், அதே நேரம் சுவர் பக்கத்தில் ஒளிந்திருக்கும் பார்வதிக்கு இது தெரிந்துவிடக்கூடாதே என்பதற்காக தவிக்கும் பார்வையுமாக ஒரே காட்சியில் கிளாப்ஸ் வாங்கிவிடுகிறார் ஸ்ரீகாந்த். கிளைமாக்சில் பார்வதியை பார்த்துவிட்டு கண் கலங்கும் அந்த காட்சியில் இதயங்களை நொறுக்குகிறார்.

'ஐயா, எல்லாரும் என்னைய பேனாக்காரன்தான் கூப்பிடுவாங்க' என்று தலையை சொறிந்து நிற்கும் ஸ்ரீகாந்த் அப்பா ராமு, கிராமத்து யதார்த்தம். பார்வதியின் அம்மாவாக ஜானகி, தோழியாக இன்பநிலா, அண்ணனாக வீரசமர் என ஒவ்வொரு பாத்திரத்திலும் உயிரோட்டம்.

தமிழ்ச் செல்வனின் 'வெயிலோடு போய்' என்ற கதையை தழுவிய படமாக இருந்தாலும் அதில் உள்ள யதார்த்தங்களை மறைத்துவிடாமல் கவிதையாக பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையா.

காட்சிகளோடு கைபிடித்து வரும் எஸ்.எஸ்.குமரனின் இசை அருமை. பரவை முனியம்மா கோஷ்டியின் பாட்டு தேவையில்லாத திணிப்பு.

கரிசல் கிராமத்து யதார்த்தத்தை அப்படியே அள்ளி வந்திருக்கிற, தமிழ் சினிமாவுக்கு காவியமாய் ஒரு 'பூ'வை தந்த சசிக்கு, பூச்செண்டுகள் தரலாம்.

நடிப்பு: ஸ்ரீகாந்த், பார்வதி, ராமு, வீரசமர், இனிகோ, இன்பநிலா, 'ஹலோ' கந்தசாமி,

தயாரிப்பு: கோ.தனஞ்செயன், பி.ஆர்.சரஸ்வதி,இயக்கம்: சசி, இசை: எஸ்.எஸ்.குமரன்.













©2008

All Rights Reserved

News and Advertisement Please Contact Yuganesan, +91-9841523276
+91-9176186119

No part of this website may be reproduced or used in any form without permission

DESIGNED AND HOSTED BY "KANAVU THOZHIL SALAI"-
FORTNIGHTLY TAMIL CINEMA MAGAZINE

send your comments and corrections